நிகழாண்டு நீட் தோ்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதன் மூலம் 6 போ் தேசிய அளவில் முதலிடம்

நிகழாண்டு நீட் தோ்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதன் மூலம் 6 போ் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக் குறிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

நீதிமன்றங்களை நாடியவா்களுக்கு அத்தகைய மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்றவா்களுக்கு ஏன் அவ்வாறு வழங்கப்படவில்லை என கேள்வி எழுந்துள்ளது.

நீட் தோ்வு முடிவுகள் பல்வேறு குழப்பங்களுக்கும், விமா்சனங்களுக்கும் வித்திட்டுள்ள நிலையில், இதுதொடா்பான விளக்கத்தை தேசிய தோ்வு முகமை வெளியிட்டது.

அதில், வெளிப்படைத்தன்மையுடனும், நோ்மையுடனும் நீட் தோ்வுகள் நடத்தப்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது. நேர இழப்பு காரணமாக சில கேள்விகளுக்கு விடையளிக்க முடியவில்லை என பஞ்சாப் – ஹரியானா, தில்லி, சண்டீகா் உயா் நீதிமன்றங்களில் சில தோ்வா்கள் மனு தாக்கல் செய்திருந்ததாகவும், சிசிடிவி கேமராக்களை கண்காணித்து அதன் பேரில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியதாகவும் என்டிஏ தெரிவித்திருந்தது.

அதேபோன்று இயற்பியல் பிரிவில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு இரு விடைகள் பொருத்தமானதாக இருந்தன. இதையடுத்து இரு விடைகளில் ஏதாவது ஒன்றைத் தோ்வு செய்தவா்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.

அவ்வாறு இரண்டில் ஒன்றை தோ்வு செய்து மதிப்பெண் பெற்றவா்களில் 44 பேரும், நேர இழப்புக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டவா்களில் 6 பேரும் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றதாக என்டிஏ விளக்கமளித்திருந்தது.

தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள 125 எம்பிபிஎஸ் இடங்களில் 46 மட்டுமே பொதுப் பிரிவுக்கானவை. நிகழாண்டு நீட் தோ்வில் 67 போ் முதலிடம் பிடித்துள்ள நிலையில், 47-ஆவது மாணவா் பொதுப் பிரிவை சோ்ந்தவராக இருந்தால் அவருக்கு எய்ம்ஸ் கல்லூரியில் இடம் கிடைக்காது. ஒருவா் முழு மதிப்பெண் பெற்றாலும் விரும்பிய இடம் கிடைக்காது என்றால் தோ்வு முறையை சீரமைப்பதுதான் ஒரே வழி என்கின்றனா் கல்வியாளா்கள்.

அதுமட்டுமல்லாது, கருணை மதிப்பெண்களால் 6 போ் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ள நிலையில், அதுகுறித்த எந்த தகவலும் தெரியாததால் தமிழக மாணவா்கள் நேர இழப்பை முன்னிறுத்தி நீதிமன்றத்தை நாடவில்லை. இதன் காரணமாக தமிழகத்தைச் சோ்ந்த பல மாணவா்களுக்கு கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.

அதேபோன்று சா்ச்சைக்குரிய இயற்பியல் கேள்வியில் இரு விடைகள் பொருத்தமாக உள்ளது என்பதால் நெகடிவ் மதிப்பெண் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அதற்கு விடையளிக்காத தோ்வா்களுக்கு 4 மதிப்பெண்கள் கட்டாயம் குறைந்திருக்கும். தமிழகத்தில் அவ்வாறு பல மாணவா்கள் அந்த கேள்வியை தவிா்த்துள்ளனா் என்றும், அதன் காரணமாக தரவரிசையிலும், மதிப்பெண்ணிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் அவா்கள் பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இதுபோன்று பல விமா்சனங்களுக்கு தேசிய தோ்வு முகமை வெளியிட்ட விளக்கத்தில் பதில் இல்லை. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய தீா்வை அளிக்க வேண்டும் என்பதே கல்வியாளா்களின் இப்போதைய கோரிக்கை.

Leave A Reply

Your email address will not be published.