குணப்படுத்த முடியாத புற்றுநோய்… சிங்கப்பூரில் அவரது தலைமையில் நடைபெறும் இறுதிக் கலை நிகழ்ச்சி
பங்களாதேஷைச் சேர்ந்த 37 வயது ஃபாஸ்லி இலாஹி (Fazley Elahi) சிங்கப்பூருக்கு 2009ஆம் ஆண்டில் வேலைக்காக வந்தார்.
சிங்கப்பூரில் இருக்கும் சக வெளிநாட்டு ஊழியர்களுக்காக அவர் பல நடவடிக்கைகளை ஏற்பாடு செய்திருக்கிறார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான கலாசார நிகழ்ச்சி, நூலகம் ஆகியவற்றைத் தொடங்கிவைத்தப் பெருமை அவரைச் சேரும்.
ஆனால் சிங்கப்பூரில் அவர் இருக்கும் காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது.
திரு ஃபாஸ்லிக்குக் குணப்படுத்த முடியாத புற்றுநோய் இருக்கிறது.
அவரின் பெங்குடலை முதலில் பாதித்த நோய் இப்போது உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவியுள்ளது.
வாழும் காலத்தை மனைவியுடனும் மகனுடனும் கழிக்க ஆசைப்படுகிறார் அவர்.
ஜூன் 16ஆம் தேதி நடைபெறும் கலாசார நிகழ்ச்சி அவரது தலைமையில் நடைபெறும் இறுதி நிகழ்ச்சியாக இருக்கும்.
ஆடல், பாடல், கவிதை ஆகிய கலைகளில் நாட்டம் கொண்ட வெளிநாட்டு ஊழியர்களுக்காக 2018 முதல் அவர் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறார்.
தமக்குப் புற்றுநோய் இருப்பது தெரிந்ததும் அதற்கான சிகிச்சையைப் பெற்றதாகச் சொன்னார் அவர்.
ஆயினும் நோய் மற்ற உடலுறுப்புகளுக்குப் பரவியது.
வேலையை இழந்த அவர், குறைந்த சம்பளம் தரும் மற்றொரு வேலையில் சேர்ந்தார்.
புற்றுநோய் அவரது நுரையீரலுக்கும் எலும்புகளுக்கும் பரவியதை அறிந்தபோது மருத்துவர் அவர் இன்னும் 3 முதல் 6 மாதங்கள் வரை தான் உயிர் வாழ்வார் என்று கூறினார்.
“முடிந்தால் எனது நாட்டில் சிகிச்சை பெறுவேன். குணமடைய முடியவில்லை என்றால் பரவாயில்லை. எல்லாப் பணத்தையும் எனக்காகச் செலவு செய்ய நான் விரும்பவில்லை” என்றார் திரு. ஃபாஸ்லி.
இத்தனை ஆண்டுகளாகத் தமது குடும்பத்துக்கு உழைத்துச் சம்பாதித்த அவர், அவர்களுக்குச் சுமையாக இருக்க விரும்பவில்லை.
ஜூன் 23ஆம் தேதி அவர் பங்களாதேஷுக்குத் திரும்புவார்.