தீ விபத்தில் சிக்கி பலியான தமிழர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!
தீ விபத்தில் சிக்கி பலியான தமிழர்களின் குடும்பங்களுக்கு மு.க ஸ்டாலின் நிவாரணம் வழங்குகிறார்.
தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. கேரளாவைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான இந்த கட்டிடத்தில் சுமார் 195 பேர் இருந்துள்ளனர். இந்த, குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பலர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்தனர்.
அதில் தீயில் கருகி 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.உடல்களை விரைந்து இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இதற்காக குவைத் விரைந்தார் இந்திய வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.
உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இந்த தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இறந்த தமிழர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. இறந்த 7 தமிழர்களின் உடல்களும் நாளை கொச்சி கொண்டு வரப்படுகின்றன. கொச்சியிலிருந்து அமரர் ஊர்தி மூலம் தமிழர்கள் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.