குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில், அசாம் மாநில அரசு அறிவித்த ’நிஜுத் மொய்னா’ திட்டம்

குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில், அசாம் மாநில அரசு நிஜுத் மொய்னா என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.

வட மாநிலங்களில் பெரும்பாலும் குழந்தை திருமணங்கள் குறைந்துவிட்டாலும், அது முழுமையாக நின்றுவிடவில்லை. இப்போதும் ஒரு சில இடங்களில் குழந்தை திருமணம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு சிலர் பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தாலும், பல்வேறு காரணங்களால் 10 அல்லது 12ஆம் வகுப்பு முடித்தவுடன் திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர்.

இதுபோன்ற குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, நிஜுத் மொய்னா என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். அதாவது, 11ஆம் வகுப்பு முதல் முதுகலை வரை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதில் சுமார் 10 லட்சம் மாணவிகள் பயன்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருப்பதோடு, பட்ஜெட்டில் ரூ.1,500 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெண் குழந்தைகளின் திருமணத்தை தாமதப்படுத்தலாம் என்று கூறியுள்ள ஹிமந்த பிஸ்வா சர்மா, பெண்களை நிதிரீதியாக சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், பள்ளிகளில் பெண் குழந்தைகளை சேர்க்கும் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதுகலை வரை படிக்கும் அனைத்து மாணவிகளும் இந்த திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள் என்றும், திருமணமான பிறகு படிப்பவர்களுக்கு இந்த பலன் கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எம்.எல்.ஏ., எம்.பி.க்களின் மகள்கள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000, பட்டப்படிப்பு மாணவிகளுக்கு ரூ,1,250, முதுகலை மாணவிகளுக்கு ரூ.2,500 வழங்கப்படும். இருப்பினும், இரண்டு மாத கோடை விடுமுறையின்போது இந்த உதவித்தொகை கிடைக்காது என்றும், ஒவ்வொரு ஆண்டும் 10 மாதங்களுக்கு மட்டும் இந்த உதவித்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் அசாம் அரசு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.