வெறும் 2 மணி நேரத்தில் 1500-க்கும் மேற்பட்ட ரொட்டிகள் : அரசு மருத்துவமனை சாதனை
கர்நாடக மாநிலத்திலேயே சிறந்த மருத்துவமனை என்று பெயர் பெற்ற விஜயபுரா மாவட்ட மருத்துவமனை மற்றும் ஒரு சாதனையை படைத்துள்ளது. நோயாளிகளுக்கு சிறந்த சேவை அளிப்பதில் பிரபலமாக உள்ள இந்த மருத்துவமனை, இனி நல்ல சுவையான உணவையும் வழங்கும் மருத்துவமனை என்ற பெயரை பெற போகிறது. இரண்டு மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சுவையான உணவை தயார் செய்யும் வகையில் இந்த மருத்துவமனையில் இதற்கென பிரத்யேக இயந்திரம் அமைக்கப்ட்டுள்ளது.
நாட்டிலேயே சிறந்த மருத்துவமனையாக மத்திய அரசின் காயகல்பா விருதை விஜயபுரா மாவட்ட மருத்துவமனை 2 முறை பெற்றுள்ளது. நோயாளிகளுக்கு சிறந்த சேவை வழங்குவது, அவர்களை சிறப்பாக பராமரிப்பது உட்பட பல விஷயங்களுக்காக தூய்மையான மற்றும் நல்ல ஒரு மருத்துவமனை என்ற பெயரை இது பெற்றுள்ளது. தற்போது இந்த மருத்துவமனை செய்துள்ள ஒரு விஷயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜயபுரா மாவட்ட மருத்துவமனையில் தினமும் சராசரியாக சுமார் 400 நோயாளிகள் அட்மிட் செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு உணவு வழங்க மாவட்ட மருத்துவமனையை சேர்ந்த ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
ஆனால் தற்போது ரொட்டி தயாரிக்கும் இயந்திரம் இந்த மருத்துவமனையில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இந்த மெஷின் மூலம் வெறும் 2 மணி நேரத்தில் 1500-க்கும் மேற்பட்ட ரொட்டிகள் தயாராகி வருகின்றன. இந்த புதிய மெஷின் மூலம் அந்த மருத்துவமனை நோயாளிகளுக்கு தூய்மையான ரொட்டி சிறந்தமுறையில் வழங்கப்படுகிறது. ரொட்டி தயாரிக்கும் இந்த இயந்திரம் சில நல்லுள்ளம் படைத்த நன்கொடையாளர்கள் உதவியுடன் தனித்துவம் மிக்க விஜயபுரா மாவட்ட மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1 மணி நேரத்தில் 500-700 ரொட்டிகள்: சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான இந்த ரொட்டி தயாரிக்கும் மெஷினை நன்கொடையாளர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு வழங்கியுள்ளனர். இந்த மெஷின் ஒரு மணி நேரத்தில் 500 முதல் 700 ரொட்டிகளை தயாரிக்கிறது. இந்த மெஷின் வருவதற்கு முன் முன்பு 5 முதல் 6 பேர் ரொட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது மூன்று பணியாளர்கள் மட்டுமே சமையல் வேலைகளை கவனித்து வருகின்றனர். மருத்துவமனையில் சமையல் வேலை பார்ப்பவர்கள் கூறுகையில், இந்த ரொட்டி தயாரிக்கும் மெஷின் ஒரே அளவிலான ரொட்டியை தயாரிப்பதற்கும் மற்ற உணவுகளை சரியான நேரத்தில் விநியோகம் செய்வதற்கும் மிகவும் உதவியாக இருக்கிறது என்றனர்.
நன்கொடையாளர்கள் ரொட்டி சுடும் இயந்திரம் மட்டுமல்ல சில குக்கர்களையும் வழங்கியுள்ளனர். இதன் மூலம் குறிப்பிட்ட இந்த மாவட்ட மருத்துவமனையின் சமையலறை அமைப்பில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் நன்கொடையாளர்களின் செயல் மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சுத்தமான மற்றும் சுவையான உணவை வழங்க பெரிதும் உதவுகிறது.