T20 உலககோப்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹாரி ப்ரூக் கொடுத்த அசாத்திய கேட்சை தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பிடித்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது.
டி20 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை சேர்த்தது. அந்த அணி தரப்பில் தொடக்க வீரர் டி காக் 38 பந்துகளில் 65 ரன்களையும், டேவிட் மில்லர் 28 பந்துகளில் 43 ரன்களையும் விளாசினர். இதன்பின் இங்கிலாந்து அணி தரப்பில் பில் சால்ட் – பட்லர் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
முதல் ஓவரிலேயே சால்ட் சிக்சருடன் அதிரடியாக தொடங்க, 2வது ஓவரை வீச ரபாடா கொண்டு வரப்பட்டார். ரபாடாவை அட்டாக் செய்ய முயன்ற சால்ட் 3வது பந்தில் பவுண்டரி அடித்தார். தொடர்ந்து 5வது பந்திலும் பவுண்டரி அடிக்க கவர் திசையில் விளாச, ஹென்ரிஸ் அபாரமாக பாய்ந்து கேட்சை பிடித்தார்.
இவரை இரு பேட்ஸ்மேன்களும் சமாளித்து விளையாடியதால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 41 ரன்கள் சேர்த்திருந்தது. பின்னர் மஹாராஜ் வீசிய 2வது ஓவரில் பேர்ஸ்டோவ் 16 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் பட்லரும் 17 ரன்களில் வெளியேறினார். இதனால் 11 ஓவர்களில் இங்கிலாந்து அணி 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஹாரி ப்ரூக் – லிவிங்ஸ்டன் கூட்டணி இணைந்து அதிரடிக்கு திரும்பியது. ரபாடா வீசிய 15வது ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 18 ரன்கள் விளாசப்பட்டது.
தொடர்ந்து நார்கியே வீசிய 16வது ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட, ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் கைகள் ஓங்கின. இங்கிலாந்து வெற்றிக்கு 24 பந்துகளில் 46 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. பின்னர் 17வது ஓவரை வீசிய பார்ட்மேன் 5 ஃபுல் டாஸ் பந்தை வீசினார். இதற்காகவே காத்திருந்த லிவிங்ஸ்டன் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 21 ரன்களை விளாசினார். இதனால் இங்கிலாந்து அணி வெற்றிபெற 18 பந்தில் 25 ரன்கள் மட்டுமேஎடுக்க வேண்டிய நிலை வந்தது. அப்போது ரபாடாவின் ஃபுல் டாஸ் பந்தில் லிவிங்ஸ்டன் 33 ரன்கள் எடுத்து வெளியேற ஆட்டம் பரபரப்பாகியது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஹாரி ப்ரூக் 34 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
பின்னர் யான்சன் வீசிய 19வது ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட்டதால், கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 14 ரன்கள் தேவையாக இருந்தது. 20வது ஓவரின் முதல் பந்திலேயே மார்க்ரமின் அசாத்திய கேட்சால் ஹாரி ப்ரூக் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் சாம் கரண் – ஆர்ச்சர் கூட்டணி களத்தில் இருந்தது. 3வது பந்தில் சாம் கரண் பவுண்டரி அடிக்க, கடைசி 2 பந்தில் 9 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. 5வது பந்தில் ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட, தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றி உறுதியானது. இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியால் தென்னாப்பிரிக்கா அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.