ஊடகவியலாளர் தனுஷ்க செனவிரத்னவை தாக்கிய கும்பலில் சிலர் சரண்
தொலைக்காட்சி ஊடகவியலாளர் தனுஷ்க செனவிரத்ன இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (21) அதிகாலை 03.00 மணியளவில் அவர் தங்கியிருக்கும் களனி பிரதேசத்தில் உள்ள விடுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான தனுஷ்க செனவிரத்ன தலை மற்றும் கால்களில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவர் தங்கும் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர் தங்குமிடத்தின் கதவு தட்டப்பட்டது.
கதவைத் திறப்பதற்கு முன் யார் என்று கேட்டதாகவும், போலீஸ் என்று கூறியதால் தனது அறைக் கதவைத் திறந்ததாகவும் கூறப்படுகிறது.
தன்னைத் தாக்கிய நபர் விடுதியில் தன்னுடன் தங்கியிருந்த ஒருவரின் பெயரைச் சொல்லி அந்த நபர் எங்கே என்று கேட்டதாக அவர் கூறுகிறார்.
அப்போது அந்த நபர் விடுதியில் இல்லை என தனுஷ்க கும்பலிடம் கூறியபோதும் , அவர்கள் தனுஷ்காவை பலமுறை தாக்கியுள்ளனர்.
முதலில் ஒருவர் மட்டும் வீட்டினுள் வந்து விசாரித்துக் கொண்டிருந்த போது, வீட்டிற்கு வெளியில் இருந்து வந்த இருவர் வீட்டில் இருந்த நாற்காலியால் தலையில் தாக்கியுள்ளனர்.
பின்னர் தம்மை தாக்குவதற்காக வீட்டுக்குள் வந்தவர்கள் நாட்டின் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பணியாளர்கள் என தனுஷ்க அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மேலதிக விசாரணைக்காக பொலிஸாரின் கஸ்டடியில் எடுக்கப்பட்டுள்ளன.
ஊடகவியலாளர் தனுஷ்க செனவிரத்னவை தாக்கிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் ஒருவர் நேற்று (21) இரவு பேலியகொட பொலிஸில் சரணடைந்ததாகவும், மற்றைய சந்தேக நபர் இன்று காலை பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களின் முதற்கட்ட வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் அவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக சுதந்திர பத்திரிகை இயக்கம் விசேட அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக விசாரணை நடத்தி வெளிக்கொணர வேண்டியது காவல் துறையின் பொறுப்பு என்று அதன் ஒருங்கிணைப்பாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
‘யுக்திய’ நடவடிக்கை போன்ற செயற்பாடுகள் மூலம் பொலிஸார் தமது நற்பெயரை உயர்த்திக் கொள்ள முற்படும் அதேவேளையில், பொலிஸார் எனக் கூறிக்கொண்டு ஊடகவியலாளர்கள் மீது சில கும்பல்கள் தாக்குதல் நடத்துவதாக சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.