மனோ எம்பி தலைமையில் தமுகூ மற்றும் மலையக சிவில் சமூக குழுவினர் அமெரிக்க தூதர் ஜூலி சாங் இடையே சந்திப்பு.

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சாங் தலைமையிலான குழுவினருக்கும், மனோ கணேசன் எம்பி தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் மலையக சிவில் சமூக தூதுக்குழுவுக்கும் இடையில் காத்திரமான சந்திப்பு இன்று கொழும்பு அமெரிக்க தூதரின் இல்லத்தில் நிகழ்ந்தது.

இதன் போது, தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் மற்றும் தமுகூ/ஜமமு களுத்துறை மாவட்ட அமைப்பாளர் அன்டன் ஜெயசீலன் மற்றும் சிவில் சமூகம் சார்பில் பெ. முத்துலிங்கம், பேராசிரியர் மற்றும் மமமு பொது செயலாளர் விஜயசந்திரன், பேராசிரியர் சந்திரபோஸ், பேராசிரியர் ரமேஷ் ராமசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். அமெரிக்க தரப்பில், தூதுவருடன் அரசியல் அலுவலர் அடம் மிசெலோ, யூஎஸ்எய்ட் வேலை திட்ட முகாண்மை விசேட அலுவலர்கள் ஜனக விஜயசிறி, ரெஹானா கட்டிலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் எம்பி ஊடகங்களுக்கு தெரிவித்தாவது,

இலங்கையின் பன்னிரண்டு மாவட்டங்களில் பரந்து வாழும் மலையக மக்களை, இந்நாட்டில் முழுமையான குடி உரிமை கொண்ட மக்களாக முறை மாற்றம் பெரும் நோக்கில், மலையக சிவில் சமூகத்தின் ஒத்துழைப்புடன் தமிழ் முற்போக்கு கூட்டணி, நாட்டில் அடுத்து வரும் அரசியல் மாற்றங்களை ஒட்டி வகுத்து வரும் வரை-பாதை (Road Map) எழுத்து மூலமான ஆவணம் இன்று அமெரிக்க தூதுவரிடம் கையளிக்க பட்டது. வாழ்வாதார காணி, வதிவிட காணி, கல்வி, தொழில் பயிற்சி, நில சார்பற்ற சமூக சபை ஆகிய முன்னுரிமை விடயங்கள் பற்றிய விபரங்கள் இந்த ஆவணத்தில் அடங்கி உள்ளன.

தினக்கூலி தொழிலாளர்கள், பெருந்தோட்ட துறையில் பங்காளர்களாக முறை மாற்றம் பெறல், பெருந்தோட்ட துறையில் வாழ்கின்ற அனைத்து நிலமற்ற குடும்பங்களுக்கு வதிவிட காணி வழங்கள், கல்வி துறை தொடர்பில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில் நுட்பம் ஆகிய பாடங்களுங்கான விசேட ஆசிரியர் பயிற்சி கல்லூரி அமைத்தல், மலையக பெண்களுக்கான தாதியர் பயிற்சி கல்லூரி அமைத்தல் மற்றும் உலகளாவிய நாடுகளில் பரந்து வாழும் சிறுபான்மை இனத்தவர் மத்தியில் அமைய பெற்றுள்ள நில சார்பற்ற சமூக சபைகள் பற்றிய அனுபவங்களை பகிர்த்து கொள்ளல் ஆகியவை பற்று கலந்துரையாட பட்டன.

இத்தகைய நிறுவனங்களை அமைப்பது, அவை தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது, அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது ஆகிய பொறுப்புகளை மக்கள் ஆணையுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுக்கும். அமெரிக்க உட்பட எமது சர்வதேச சமூக நண்பர்கள் இவற்றுக்கான தொழில் நுட்ப உதவிகள், அபிவிருத்தி உதவிகள் ஆகியவற்றை எமக்கு வழங்க முன் வர வேண்டும் என்று நாம் கோரினோம். இந்த எமது கோரிக்கைகளை சாதகமாக பரிசீலிக்க அமெரிக்க தூதுவர் தலைமையிலான குழுவினர் உறுதி அளித்தனர்.

மேலும் மலையக மக்கள் இலங்கையில் மிகவும் பின் தங்கிய பிரிவினாரக இருப்பதை தாம் ஏற்று கொள்வதாகவும், அவர்களுக்கு விசேட ஒதுக்கீட்டு திட்டங்கள் தேவை என்பதை தம் அறிந்துள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்தார். மேலும், தற்போது, அமெரிக்க அரசின் சார்பில் மலையக மக்களின் நலவுரிமைகள் தொடர்பில் முன்னெடுக்க படுகின்ற வேலை திட்டங்கள் தொடர்பிலும் விளக்கி கூறி அது தொடர்பான எழுத்து மூலமான ஆவணம் ஒன்றையும் அவர் எமக்கு கையளித்தார். எம் இடையே ஆன இந்த கலந்துரையாடலை மென் மேலும் தொடர தான் விரும்புவதாகவும், மலையக மக்களுக்கு இன்னமும் உதவிடும் சந்தர்ப்பங்களை எதிர் நோக்க அமெரிக்க அரசு விரும்புகிறது என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மலையக மக்கள் இந்நாட்டில் முழுமையான குடி உரிமை கொண்ட மக்களாக முறை மாற்றம் பெரும் நோக்கில் தமிழ் முற்போக்கு கூட்டணியால் முன் வைக்கப்பட்ட ஆவணத்தை மேலும் செழுமை படுத்தி, அரசியல் பிரதிநிதிகளும், சிவில் சமூக உறுப்பினர்களும் இணைந்து சர்வ அம்சங்களும் அடங்கிய காத்திரமான அறிக்கையை அமெரிக்க தரப்பினரிடம் கையளிப்பது என்றும், பின்னர் அதன் அடிபடையில் விரிவான நடவடிக்கைகளை முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்க பட்டது.

Leave A Reply

Your email address will not be published.