இன, சமய விவகாரங்களைக் கையாள கடுமையான சட்டங்கள் உண்டு: சண்முகம்.
இனம், சமயப் பிரச்சினைகளில் நடக்கிறபடி நடக்கட்டும் என்ற அணுகுமுறையில் சிங்கப்பூர் செயல்பட முடியாது என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்து உள்ளார்.
“எல்லாரும் சமம் என்ற நிலைப்பாட்டின் மீது கடப்பாடு கொண்டுள்ள நாம் இன விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டு இருக்க இயலாது,” என்று அவர் கூறியுள்ளார்.
சமூக ஒற்றுமையை நிலைநாட்ட சிங்கப்பூர் அதிகமாகத் தலையிட்டு வந்துள்ளதாகவும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட மக்களுடன் அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொள்வோரைக் கையாள கடுமையான சட்டங்களை சிங்கப்பூர் கொண்டிருப்பதாகவும் திரு சண்முகம் தெரிவித்து உள்ளார்.
இன, சமயப் பதற்றங்களால் அச்சத்துக்கு ஆளாகி இருக்கும் இன்றைய உலகில், சிங்கப்பூரில் காணப்படும் அமைதியும் நல்லிணக்கமும் வெறுப்புப் பேச்சையும் புண்படுத்தும் பேச்சையும் பொறுத்துக்கொள்ளாத நிலைக்கான காரணங்களாக இருக்க வேண்டும் என்றார் அமைச்சர்.
லீ குவான் யூ பொதுக் கொள்கைப் பள்ளியின்கீழ் செயல்படும் கொள்கை ஆய்வுக் கழகமும் உள்துறை அமைச்சும் இணைந்து நடத்திய இன விவகாரம் தொடர்பான ஆய்வரங்கு ஒன்றில் திங்கட்கிழமை (ஜூலை 1) கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
‘வன்முறையற்ற இன விரோதப்போக்குகள்’ என்னும் தலைப்பில் அந்த ஆய்வரங்கு நடைபெற்றது.
இன விரோதச் செயல்களைக் கையாளும் மற்ற நாடுகளின் அனுபவங்கள் பற்றிப் பேசிய அவர், சிங்கப்பூருக்கான வருங்காலச் சவால்களைக் கையாளும் அணுகுமுறை குறித்து விளக்கினார்.
மேலும் அவர் கூறுகையில், “ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள பெரும்பான்மை மக்கள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதுடன், பிற இனத்தவரையும் சமயத்தவரையும் நாகரிகத்துடன் நடத்துகிறார்கள்.
“ஆனால், அவ்வாறு நாகரிகமாக நடந்துகொள்ளாத சிலரை சட்டம் தண்டிக்காமல் விட்டுவிட்டால், இறுதியில் அத்தகையோரின் எண்ணிக்கை மக்கள்தொகையில் அதிகரித்ததைப் போன்ற நிலையை அவர்கள் உருவாக்கிவிடுவார்கள்.
“சமூகத்தில் அவர்கள் பெரும்பான்மையோராக அதிகரிக்காத நிலையிலும் வன்முறையைத் தூண்டுவதற்குத் தேவையான பகைமையை அவர்களால் ஏற்படுத்த இயலும்.
“அதுபோன்று நடக்காமல் தடுக்க, சமய நல்லிணக்கப் பராமரிப்பு சட்டத்தை சிங்கப்பூர் கொண்டுள்ளது.
“எரிச்சலூட்டும் பேச்சுகளில் ஈடுபடும் சமயத் தொண்டர்களுக்கு எதிராகக் கட்டுப்படுத்தும் ஆணை பிறப்பிக்கும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு அச்சட்டம் வழங்குகிறது.
“சட்டக் கட்டமைப்போடு, சமூக ஒற்றுமையை வளர்க்க அரசாங்கம் தீவிரமாகத் தலையிட்டுப் பாடுபடுகிறது. அரசாங்கக் கொள்கைகள் இன வரையறையைச் சுற்றி ஏற்படுத்தப்படவில்லை என்பதை அது அவ்வப்போது உறுதி செய்கிறது,” என்று திரு சண்முகம் விளக்கினார்.
பொது வீடமைப்பில் கடைப்பிடிக்கப்படும் இன ஒருங்கிணைப்புக் கொள்கையை அவர் உதாரணமாகச் சுட்டினார்.
“இன அடிப்படையிலான உறைவிடங்கள் இல்லை என்பதை உறுதி செய்யும் அந்தக் கொள்கையைக் கொண்டிருக்கும் ஒரே நாடு உலகிலேயே சிங்கப்பூராகத்தான் இருக்க வேண்டும்.
“கொள்கை மூலம் கட்டுப்படுத்தாமல் வீடமைப்பின் நிலையை சந்தையின் போக்கிற்கே அனுமதித்தால் என்ன ஆகும்,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.