131 பேரை பலி கொண்ட ஹத்ராஸ் சம்பவம்; ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

ராகுல் காந்தி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.

உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் என்ற கிராமத்தில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது.

இதில் கூட்டம் முடிந்து வெளியேறிய போது நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 131 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

100க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை சுமார் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார். இந்நிலையில், மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி, அங்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.

அலிகரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி உதவும் என உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.