ஆம்ஸ்ட்ராங்கின் உடலை மயான இடத்தில்தான் அடக்கம் செய்ய முடியும் – சென்னை உயர் நீதிமன்றம்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை மயான இடத்தில்தான் அடக்கம் செய்ய முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள கட்சியின் அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடா்பான கோரிக்கை மனு ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும் வழக்குரைஞருமான பொற்கொடி தரப்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் அளிக்கப்பட்டது.

மாநகராட்சி ஆணையா் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த கோரிக்கை தொடா்பாக அவசரமாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொற்கொடி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி(பொ) அரங்க.மகாதேவனிடம் முறையிடப்பட்டது.

இந்த மனுவை தனி நீதிபதி ஒருவா் விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டாா். இந்த வழக்கு ஞாயிற்றுக்கிழமை) காலை காணொலி மூலம் நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வி.பவானி சுப்பராயன், “மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில்தான் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்க செய்ய முடியும். சட்டப்படி குடியிருப்புப் பகுதிகளில் அடக்கம் செய்ய முடியாது. ஆம்ஸ்ட்ராங்கின் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது.

2,400 சதுர அடி நிலத்தை அரசு வழங்குகிறது அல்லவா? வேறு பெரிய இடம் இருந்தால் சொல்லுங்கள் உத்தரவிடுகிறேன்” என்று தெரிவித்து இவ்வழக்கின் விசாரணையை இன்று(ஜூலை 7) காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.