பாலியல் வன்கொடுமை இழைத்தவருக்குச் சிறை, பிரம்படி
சிறுமியர் இல்லத்திலிருந்து தப்பியோடிய 17 வயது பெண் ஒருவருக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்த மதுக்கூட உரிமையாளருக்கு சிறைத் தண்டனையும் ஒன்பது பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
குற்றவாளி, அப்பெண்ணைத் தனக்குக்கீழ் வேலை பார்க்க அனுமதி வழங்கியிருந்தார். பின்னர் தனது வீட்டில் பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்தார்.
சிங்கப்பூரரான 42 வயது ராஜ் குமார் பாலாவுக்கு திங்கட்கிழமையன்று (ஜூலை 8) 13 ஆண்டுகள், நான்கு வாரச் சிறைத் தண்டனையும் ஒன்பது பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
ராஜ் குமார், பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்து அவரை மானபங்கப்படுத்திய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. சிறார், இளம் வயதினர் சட்டத்தின்கீழ் தப்பியோடிய ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டையும் ராஜ் குமார் ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட பெண், சிங்கப்பூர் சிறுமியர் இல்லத்திலிருந்து 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தப்பியோடினார்; அப்போது அவருக்கு வயது 17 என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பிறகு டன்லப் ஸ்திரீட்டில் உள்ள ராஜ் குமாரின் ‘டான் பார் அண்ட் பிஸ்ட்ரோ’ மதுக்கூடத்தில் வேலை வாய்ப்பு இருப்பது அவருக்குத் தெரிய வந்தது. அங்கு வேலை செய்த, தப்பியோடிய வேறு ஒருவரின் மூலம் பெண்ணுக்கு இது குறித்து தகவல் கிடைத்தது.
தப்பியோடிய இன்னொருவரையும் ராஜ் குமார் பாலியல் ரீதியாகத் தாக்கினார் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போதைக்கு அந்தக் குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் சில நாள்களுக்கு மதுக்கூடத்தில் வேலை செய்தார். தப்பியோடியவர்கள் அங்கு வேலை செய்வதாகத் துப்பு கிடைத்த காவல்துறையினர், 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி அதிகாலை மதுக்கூடத்தில் சோதனை நடத்தினர்.
சோதனையை முன்னிட்டு பாதிக்கப்பட்ட பெண், வேறொரு பெண்ணுடன் சேர்ந்து சிம் லிம் டவர் கட்டடத்துக்குத் தப்பியோடினார். அங்கிருந்து ராஜ் குமார் இருவரையும் தனது கூட்டுரிமை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
தனது வீட்டில் தங்கிக்கொள்ளலாம் என்று அப்பெண்களிடம் கூறிய அவர், இருவருடனும் சேர்ந்து வீட்டில் மது அருந்தினார்.
அப்போது பாதிக்கப்பட்ட பெண் அதிக மதுபோதையில் இருந்தபோது ராஜ் குமார் அவருக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்தார். வேறொரு பெண்ணுடனும் அவர் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண், ராஜ் குமாரின் வீட்டிலிருந்து வெளியேறி 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் சரணடைந்தார். தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அவர் அவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் தனது விவகாரத்தைக் கவனித்த அதிகாரியிடம் தெரியப்படுத்தினார்.