இன்று (9) நள்ளிரவு முதல் ரயில் வேலை நிறுத்தம்
இன்று (09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க புகையிரத நிலைய அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று மாலை முதல் இந்தப் பணிப்புறக்கணிப்புக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், இன்று மதியம் போக்குவரத்து வசதிகளைப் பெற வந்த பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட 14 விடயங்களை முன்வைத்து புகையிரத நிலைய அதிபர் சங்கம் இன்று பிற்பகல் முதல் சேவையில் இருந்து விலகியிருந்தது.
நள்ளிரவு 12 மணிக்கு மேல் இயக்கப்படவிருந்த அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இயக்க தயாராக இருந்த அஞ்சல் ரயில் கூட ரத்து செய்யப் பட்டது.
எவ்வாறாயினும், சில அலுவலக ரயில்களை நாளை (10) இயக்குவதற்கு தேவையான உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நாளை (10ம் திகதி) புகையிரத சீசன் பயணச்சீட்டு வைத்திருக்கும் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் சீசன் பயணச்சீட்டை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு தேவையான வசதிகளை போக்குவரத்து அமைச்சு வழங்கியுள்ளது.
ரயில் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ள போதிலும் நாளை (10) முதல் பணிக்கு சமூகமளிக்காத அனைத்து நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சேவையில் இருந்து விலகியவர்களாகவே கருதப்படுவார்கள் என ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ். முதலிகே கூறுகிறார்.
அரச வர்த்தமானி மூலம் புகையிரதத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றியுள்ள போதிலும், அவசர தொழில் நடவடிக்கையை மேற்கொள்வதாக நிலைய அதிபர் சங்கம் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் அனைத்து நிலைய அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்.