மன்னார் வங்காலை பகுதியில் 3000 கிலோ பீடி இலைகளோடு மூவர் கைது .
மன்னார் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து மன்னார் வங்காலை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படும் 2888 கிலோ பீடி இலைகளை கொண்டு சென்ற மூவர் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படை கட்டளையின் புஸ்ஸதேவ மற்றும் தம்மன்னா ஆகிய கப்பல்களும் மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட இந்த கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில் , மன்னார் வாங்காலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான கெப் மற்றும் லொறி ஒன்று கண்காணித்து சோதனையிடப்பட்டது. அங்கு, 80 பார்சல்களில் அடைக்கப்பட்ட 2888 கிலோ பீடி இலைகள் கேப் மற்றும் லொறியில் இருந்ததுடன், சந்தேகத்தின் பேரில் 3 பேரும்,கைது செய்யப்பட்டு , கெப் மற்றும் லொறி கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக மன்னாருக்கு கொண்டு வந்து தீவின் வேறு பகுதிக்கு கொண்டு செல்ல சந்தேகநபர்கள் திட்டமிட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் மூவரோடு, பீடி இலைகள், கெப் வண்டி மற்றும் லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.