தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடக அரசு

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே. சிவகுமார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்துக்குப் பிறகு பேசிய சித்தராமையா, “காவிரி விவகாரம் தொடர்பாக வரும் ஜூலை 14 ஆம் தேதி கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளனர்.

காவிரி பாசனப் பகுதியில் 28% தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகத்தின் வலியுறுத்தலை மீறி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

தமிழகத்துக்கு ஜூலை 12-ஆம் தேதியிலிருந்து ஜூலை 31-ஆம் தேதி வரை காவிரியில் விநாடிக்கு 11,500 கனஅடி வீதம் நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரை பிலிகுண்டுலுவில் விடுவிப்பதை கர்நாடக மாநிலம் உறுதி செய்ய வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு (சி.டபிள்யு.ஆர்.சி.) வியாழக்கிழமை பரிந்துரை செய்தது.

Leave A Reply

Your email address will not be published.