அனுர ஜனாதிபதியாகும் வரை அனைத்து வேலை நிறுத்தங்களும் நிறுத்தப்படும்..- வசந்த
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க தன்னிடம் பணமில்லை என கூறும் ஜனாதிபதி,பொது சேவையில் ஒரு குழுவிற்கு கொடுப்பனவுகளை வழங்கி அரச சேவையில் முரண்பாடுகளை உருவாக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த நாட்டில் தொழிற்சங்க இயக்கம் ஜனாதிபதியின் முடிச்சுகளில் சிக்குவதற்கு தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரையில் எந்தவொரு பணிப்பகிஷ்கரிப்பும் மேற்கொள்ளப்படாது என தேசிய தொழிற்சங்க நிலையம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்கும் வரையில் எந்தவொரு வேலை நிறுத்தத்திற்கும் தமது கட்சி ஆதரவளிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.