பழங்குடியின இளைஞா் உயிரிழப்பு: திரிபுராவில் கலவரம்
திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் இரு கும்பல்களுக்கு இடையே கடந்த வாரம் நடந்த மோதலில் படுகாயமடைந்த பழங்குடி இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, அம்மாவட்டத்தில் கலவரம் வெடித்தது.
இது தொடா்பாக தலாய் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அவினாஷ் ராய் கூறியதாவது:
தலாய் மாவட்டத்தில் ஜெகந்நாதா் ரத யாத்திரையை முன்னிட்டு கடந்த ஜூலை 7-ஆம் தேதி கந்தத்வைசா சந்தையில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொள்ள பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் பரமேஷ்வா் ரியாங் (19) நண்பா்களுடன் சென்றிருந்தாா்.
அப்போது இரு கும்பல்களுக்கு இடையே திடீரென ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த ரியாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதனால் ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள் கந்தத்வைசா பகுதியில் பல கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ வைத்ததையடுத்து அப்பகுதியில் கலவரம் வெடித்தது. நிலைமை தீவிரமடைவதைத் தடுக்க அப்பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். மேலும், இனைய சேவை முற்றிலும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் தொடா்புடைய 4 நபா்களை காவல்துறையினா் கைது செய்துள்ளனா் என்றாா்.