அமெரிக்க அதிபர் அரசியலில் துப்பாக்கிச்சூடுகளின் நீண்ட வரலாறு : ஒரு பார்வை
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் துப்பாக்கியால் சுடப்பட்டதை கொலை முயற்சிக்கான சாத்தியமாக புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதே போன்று அமெரிக்க அதிபர் வரலாற்றில் பலர் சுடப்பட்ட நிகழ்வுகள் நீண்ட பட்டியலாக உள்ளது.
ரொனால்ட் ரீகன் (1981): வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியொன்றில் அதிபர் ரீகன் சுடப்பட்டு படுகாயமடைந்தார். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஜூனியர் ஜான் ஹின்க்லே 2022ஆம் ஆண்டில் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டார். ரீகன் 12 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்தச் சம்பவம் ரீகனின் செல்வாக்கை மேலும் உயர்த்தியது.
ஜெரால்ட் ஃபோர்ட் (1975): 1975 செப்டம்பரில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பெண்கள் அதிபர் ஃபோர்ட்டை கொலை செய்ய முயற்சி செய்தனர்.
இதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார். இரண்டு சம்பவங்களும் கலிஃபோர்னியாவில் 17 நாள்கள் இடைவெளியில் நடந்தன.
ஜார்ஜ் வாலஸ் (1972): ஜனநாயக் கட்சி அதிபர் தேர்தல் வேட்பாளர் பிரசாரத்தின்போது மேரிலாந்தில் உள்ள லாரென் கடைத் தொகுதியில் திரு வாலஸ் நான்கு முறை சுடப்பட்டதில் வாழ்நாள் முழுவதும் உடல் செயலிழந்து முடங்கினார்.
ராபர்ட் எஃப். கென்னடி (1968): அதிபர் ஜான் எஃப். கென்னடியின் சகோதரரான ராபர்ட், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளராக போட்டியிடும்போது லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள அம்பாசடர் ஹோட்டலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கொல்லப்பட்ட இரண்டு மாதங்களில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.
இந்த இரண்டு சம்பவங்களும் 1960களில் பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியது.
ஜான் எஃப். கென்னடி (1963): அதிபர் கென்னடி தனது மனைவியுடன் காரில் அணிவகுத்துச் சென்றபோது டெக்சாசில் உள்ள டல்லாஸ் நகரில் லீ ஹார்வே ஓஸ்வால்ட் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சம்பவத்தை விசாரித்த “வாரன் கமிஷன்” சோவியத் யூனியனில் வசித்த ஒஸ்வால்ட் தனித்தே செயல்பட்டு கென்னடியைச் சுட்டுக் கொன்றதாக தெரிவித்தது.
ஃபிராங்க்லின் டி. ரூஸ்வெல்ட் (1933): அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரூஸ்வெல்ட், புளோரிடாவின் மியாமியில் ஒரு படுகொலை முயற்சியின் இலக்காக இருந்தாலும் உயிர்தப்பினார். ஆனால் இந்தத் தாக்குதலில் அருகிலிருந்த மேயர் ஆன்டன் செர்மேக் கொல்லப்பட்டார்.
தியோடோர் ரூஸ்வெல்ட் (1912): டிரம்ப்பைப் போன்றே திரு ரூஸ்வெல்ட், அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கியில் சுடப்பட்டார்.
துப்பாக்கிக் குண்டு அவரது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் மார்பில் இருந்தது. அவர் வைத்திருந்த ஐம்பது பக்க உரை, மூக்குக் கண்ணாடியின் பெட்டகம் ஆகியவை, பாய்ந்த தோட்டாவின் வேகத்தை குறைத்துவிட்டன. அவர் குண்டடிபட்ட பின்னரும் உரையை திட்டமிட்டபடி வழங்கி, பலரின் பாராட்டைப் பெற்றார்.
வில்லியன் மெக்கின்லே (1901): அதிபர் மெக்கின்லே நியூயார்க்கின் உள்ள பஃபலோ நகரில் அராஜகவாதி லியோன் ஷோல்கோஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆப்ரஹாம் லிங்கன் (1865): திரு லிங்கன், நன்கு அறியப்பட்ட நடிகரான ஜான் வில்கெஸ் பூத் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார். சம்பவத்தின்போது வாஷிங்டனில் உள்ள ஃபோர்ட் அரங்கத்தில் ‘Our American Cousin’ நாடகத்தை அன்றைய அதிபர் பார்த்துக் கொண்டிருந்தார்.