ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் மீது குண்டர் சட்டத்தின் *கீழ் நடவடிக்கை : காவல் ஆணையர் அருண் உறுதி.

அண்மையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

ஜூலை 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார் ஆம்ஸ்ட்ராங். இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகள் தேடப்பட்டு வந்தனர்.

இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தப் படுகொலை சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட திருவேங்கடம் இரு நாள்களுக்கு முன்னர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும் சில தேடப்பட்டு வருவதாகவும் முன்பகை காரணமாக இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் அருண், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் இப்படுகொலை தொடர்பாக தனிப்படைகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தமிழக ஆளுநர் ரவியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பின் போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுப்பார் எனக் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.