காஸா மக்களின் மரண எண்ணிக்கை மிக அதிகம்

காஸா பள்ளத்தாக்கில் இஸ்‌ரேல் மேற்கொண்ட கடும் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் மரண எண்ணிக்கை ‘ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் உயர்ந்துள்ளது’ என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரு உயரிய இஸ்‌ரேலிய அதிகாரிகளிடம் ஜூலை 15ஆம் தேதி தெரிவித்துள்ளார்.

அண்மையில் இஸ்‌ரேலிய ராணுவம், அப்பாவி மக்கள் உள்ள அகதிகள் முகாம், ஐக்கிய நாடுகள் நடத்தும் பள்ளிகள் உட்பட பல இடங்களில் கடும் தாக்குதல்களை நடத்தின என்று திரு பிளிங்கனின் பேச்சாளர் தெரிவித்தார்.

அதனையொட்டி கருத்து தெரிவித்த ஹமாஸ், “நாங்கள் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தோம். அதன் மூலம் போர்நிறுத்தம் நடந்து, போர் கைதிகள் விடுவிப்பை எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அந்த நம்பிக்கை மேலும் குறைந்து வருகிறது,” என்றது.

செல்வாக்குமிக்க இரு இஸ்ரேலிய அதிகாரிகளான உத்திபூர்வ விவகார அமைச்சர் ரான் டெர்மர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸாச்சி ஹனேக்பி ஆகியோரை திரு பிளிங்கன் சந்தித்து, காஸாவில் அண்மையில் நிகழ்ந்த அப்பாவி மக்களின் மரண எண்ணிக்கை குறித்து கவலை தெரிவித்தார்.

“உயிரிழப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் உயர்ந்துள்ளது. இந்தப் போரில் மிக அதிக அளவில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜூலை 13ஆம் தேதி, இஸ்‌ரேலியத் தாக்குதலில் கான் யூனிஸ் நகருக்கு அருகே அல்-மவாசி முகாமில் உள்ள 90க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்று ஹமாஸ் ஆட்சி புரியும் காஸா சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இஸ்‌ரேலால் பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட அல்-மவாசி முகாமில் எச்சரிக்கை ஒலிகள் ஒலித்தன, பெண்கள் கதறி அழும் சத்தம் கேட்டது, இடிபாடுகளிலிருந்து உயிரற்ற பிள்ளைகளின் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டன என்று ஏஎஃப்பி செய்தி வெளியிட்டது.

இஸ்‌ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள், காஸாவுக்கான மனிதாபிமான உதவி, போருக்குப் பிந்திய திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றியது என்றும் திரு மில்லர் விவரித்தார்.

இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, ஜூலை 24ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருக்கிறார். அதற்கு முன்னதாக திரு பிளிங்கனின் இஸ்‌ரேலியப் பயணம் இடம்பெற்றுள்ளது.

பழி தீர்க்கும் போர்
இதற்கிடையே, இஸ்‌ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து பாலஸ்தீன கைதிகளுக்கு எதிராக இஸ்‌ரேல் பழி தீர்க்கும் போரை அவிழ்த்துவிட்டுள்ளது என்று பாலஸ்தீன அமைப்பின் கைதிகள் விவகார அமைச்சர் கதுரா ஃபரேஸ் ஜூலை 15ஆம் தேதி குற்றஞ்சாட்டினார்.

இஸ்‌ரேலிய சிறைகளில் சித்திரவதை, பாலியல் வன்கொடுமை, பிற பாலியல் கொடுமைகள் போன்ற செயல்கள் நடந்து வருகின்றன என்றும் ஆனால் இஸ்‌ரேலிய அதிகாரிகள் அவற்றை மறுத்து வருகின்றனர் என்றும் திரு ஃபரேஸ் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.