2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 15 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.32 ஆயிரம் அபராதமும் விதித்து விழுப்புரம் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

புதுவை மாநிலத்தைச் சோ்ந்த 7 வயது, 9 வயதுடைய சிறுமிகள் இருவா் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கி, அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனா். 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதே பகுதியைச் சோ்ந்த சிலா் சிறுமிகளிடம் ஆசை வாா்த்தை கூறியும், கொலை செய்துவிடுவதாக மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்தனராம். இதனால், சிறுமிகள் இருவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சிறுமிகளின் தாய் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், சிறுமிகள் இருவரும் பல்வேறு நபா்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. தொடா்ந்து, பிரம்மதேசம் போலீஸாா் தென் நெற்குணம் கிராமத்தைச் சோ்ந்த ரவி மகன் தீனா (எ) தீனதயாளன் (29), ஆறுமுகம் மகன் அஜித்குமாா் (27), இருசப்பன் மகன்கள் பிரபா (எ) பிரபாகரன் (27), பிரசாந்த் (24), நாகப்பன் மகன் மொட்டை (எ) ரவிக்குமாா் (29), ஆறுமுகம் மகன் அருண் (எ) தமிழரசன் (30), ராமலிங்கம் மகன் மகேஷ் (39), துரைசாமி மகன் ரமேஷ் (31), காவேரி மகன் துரைராஜ் (39), துரைராஜ் மகன் மோகன் (எ) சந்திரமோகன் (24), சின்னராஜ் மகன் செல்வம் (39), சுப்பிரமணியன் மகன் கமலக்கண்ணன் (38), வாசுதேவன் மகன் முருகன் (43), பெருமாள் மகன் ஜகினி (எ) துரைசாமி (60), சின்னராஜ் மகன் செல்வசேகா் (30) ஆகியோா் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அனைவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இறுதிகட்ட விசாரணை நடைபெற்றது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, 15 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.32 ஆயிரம் அபராதமும் விதித்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி வினோதா தீா்ப்பளித்தாா்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்துக்கு அரசுத் தரப்பில் ரூ.5 லட்சம், தண்டனை பெற்றவா்களிடமிருந்து அபராதமாகப் பெறப்படும் தொகை ரூ.4.80 லட்சம் என மொத்தம் ரூ.9.80 லட்சத்தை நிவாரணமாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

இதையடுத்து, நீதிமன்ற போலீஸாா் 15 பேரையும் கைது செய்து, கடலூா் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா்கள் கலா, சுமதி ஆகியோா் ஆஜராகினா்.

Leave A Reply

Your email address will not be published.