சிங்கப்பூர் எக்ஸ்போவில் ஆனந்தம், உணர்ச்சி கலந்த சித் ஸ்ரீராமின் இசைக் கச்சேரி.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் இந்திய பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராமின் அரங்கம் நிறைந்த கச்சேரி கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடந்தேறியது. பல்வேறு வயதினரும் கலந்துகொண்ட இக்கச்சேரி உற்சாகம் மிகுந்த, கண்கலங்க வைக்கும் தருணங்கள் நிறைந்ததாக அமைந்தது.

இந்நிகழ்ச்சியில் தம் பெற்றோரும் சகோதரியும் இணைந்திருந்ததாகவும் அது தமக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருவதாகவும் சித் ஸ்ரீராம் கூறினார். கர்நாடக இசை கற்ற தம் தாயார், தாத்தாவிடமிருந்து தாம் பலவற்றைக் கற்றுக்கொண்டதாகவும் அது தமக்குப் பெரிதளவில் வாழ்க்கையில் உதவியதாகவும் அவர் கூறினார்.

தமிழ்க் கலாசாரம் மீது தமக்கு மிகுந்த பற்று இருப்பதாகக் கூறிய அவர், அமெரிக்காவில் இருந்ததால் தமது கலாசாரத்தோடு பெரிதளவில் இணைய முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். இசை மூலமே தமது கலாசாரத்தோடு சித் ஸ்ரீராம் இணைந்துள்ளார்.

பிரபல பாடல்களை அவர் பாட, அரங்கமே அவருடன் சேர்ந்து பாடத் தொடங்கியது.

‘ஆராரிராரோ ராரோ’ என்று அவர் பாடிய திரைப்படப் பாடல், அனைவருக்கும் பேரானந்தத்தை அளித்தது. சித் ஸ்ரீராமின் இசைக் குழுவும் மிகவும் ஆற்றல்மிக்க முறையில் கச்சேரியைப் படைத்தது.

இசை, நடனம், உணவு மூலம் தங்களது வேர்களுடன் இணைவது முக்கியம் என்றார் சித் ஸ்ரீராம்.

“கலாசாரத்துடன் இணைவது ஒரு சுமையாக இருக்கக்கூடாது, அது தானாக வரவேண்டும். இசை, ஒவ்வொருவருடன் இணைவதற்கு உதவியாக இருக்கிறது,” என்று கூறினார்.

தமது இசை எவ்வாறு ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அது எவ்வாறு ஒருவரின் வாழ்க்கையை மெருகூட்டுகிறது என்றும் அதுவே இசையின் ஆகப்பெரிய சக்தி என்றும் அவர் சொன்னார்.

இசை இன்றளவும் மனிதாபிமானத்தைக் கட்டிக்காப்பதாக சித் ஸ்ரீராம் கூறினார்.

‘நாயகன்’ படத்தில் ‘தென்பாண்டி சீமையிலே’ பாடலை சித் ஸ்ரீராம் பாடியவுடன் தமக்கு அழுகை வந்துவிட்டதாகவும் தந்தையின் நினைவு வந்துவிட்டதாகவும் பார்வையாளர்களில் ஒருவர் கூறினார்.

சித் ஸ்ரீராம் ஓய்வின்றி தொடர்ந்து மூன்று மணி நேரம் சங்கதி, ஸ்ருதி மாறாமல் பாடியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. கச்சேரிக்குச் சென்ற பலரும் தங்களது பொழுது இனிதே கழிந்ததாகக் கூறினர்.

தாம் விரைவில் மீண்டும் சிங்கப்பூருக்கு வரவுள்ளதாக சித் ஸ்ரீராம் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.