கேலி செய்த பெண் செய்தியாளர் மீது சட்ட நடவடிக்கை எடுத்த இத்தாலிய பிரதமர்.
இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியைக் கேலி செய்து சமூக ஊடகத்தில் பதிவு செய்த பெண் செய்தியாளர் திருவாட்டி மெலோனிக்கு இழப்பீடாக 5,000 யூரோ (S$7,300) வழங்க வேண்டும் என்று மிலான் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
இதை அன்சா என்ற அந்நாட்டு செய்தி நிறுவனமும் மற்ற உள்ளூர் ஊடகங்களும் தெரிவித்தன.
திருவாட்டி கியூலியா கோர்டெஸ் என்ற அந்தப் பெண் செய்தியாளர் 1,200 யூரோ அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த அபராதத் தொகையை அவர் தற்பொழுது கட்டத் தேவையில்லாமல் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் செய்தியாளர், திருவாட்டி மெலோனியின் உயரம் குறித்து எக்ஸ் தளத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கேலியாக விமர்சித்திருந்தார். அது ஒருவரை உருவ கேலிக்கு உள்ளாக்குவது என்று வகைப்படுத்தப்பட்டது.
திருவாட்டி மெலோனியும் அந்தப் பெண் செய்தியாளரும் சமூக ஊடகத்தில் மோதிக்கொண்டதைத் தொடர்ந்து இத்தாலியப் பிரதமர் மெலோனி சட்ட நடவடிக்கை எடுத்தார் என்று கூறப்படுகிறது.
தற்போதைய இத்தாலியப் பிரதமரின் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘ஃபார் ரைட் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி’ கட்சி முன்னர் எதிர்க்கட்சியாக இருந்தது. அப்பொழுது திருவாட்டி மெலோனியின் வரைபடத்துடன் அவர் பின்னால் முன்னாள் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் உருவம் கொண்ட படத்தை திருவாட்டி கோர்டெஸ் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், “உன்னால் என்னை அச்சுறுத்த முடியாது. எப்படிப் பார்த்தாலும் நீ 1.2 மீட்டர் (4 அடி) உயரம்தான். உன்னை என்னால் பார்க்கக்கூட முடியாது,” என்று திருவாட்டி மெலோனியைப் பற்றி அந்தப் பெண் செய்தியாளர் பதிவிட்டிருந்தார்.