திருப்பதி கோவிலில் 20 முறை சாமியை தரிசனம் செய்த பக்தர் கைது!
திருப்பதி கோவிலில் 20 முறை சாமியை தரிசனம் செய்த பக்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற பக்தர் நேற்று அதிகாலை ஒரு 3 மணியளவில் சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவர் கொண்டு வந்திருந்த ஆதார் அட்டை மற்றும் சுப்ரபாத சேவை டிக்கெட்டை வாங்கி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ஆதார் அட்டையில் உள்ள முகமும், ஸ்ரீதரின் முகமும் ஒத்துப்போகவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த திருமலை-திருப்பதி தேவஸ்தான பறக்கும் படை அதிகாரிகள் ஸ்ரீதரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் போலி ஆதார் அட்டையைப் பயன்படுத்தி குலுக்கல் முறை சேவையான சுப்ரபாத சேவை டிக்கெட்டை பெற 400 முன்பதிவுகள் செய்திருப்பதும், அதை வைத்து 20 முறை டிக்கெட்டுகளை வாங்கி சாமி தரிசனம் செய்திருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, பறக்கும் படை அதிகாரிகள், ஸ்ரீதரை திருமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்தனர். மேலும், சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளில் வேறு யாரேனும் அவருடன் இணைந்து மோசடி செய்திருக்கிறார்களா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.