வெள்ளை நிறத்தில் பிறந்த எருமை கன்று…அதிர்ச்சியில் மக்கள்!
எருமை மாடு என்றால் நம் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது அதன் கருப்பு நிறம்தான். ஆனால், பால் போன்ற வெள்ளை நிறத்தில் எருமை கன்று குட்டியை பார்த்துள்ளீர்களா? அதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால், உண்மையில் தற்போது வெள்ளை நிறத்தில் ஒரு எருமை கன்று குட்டி பிறந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கரவுளியில் எருமை மாடு ஒன்று பால் போன்ற வெண்மையாகவும், அழகாகவும் ஒரு குட்டியை ஈன்றுள்ளது. பார்ப்பதற்கு பசு கன்று போலவே காட்சியளிக்கும் இந்த கன்றுக்குட்டியின் உடலில் இந்த இடத்திலும் ஒரு சிறிய அளவில் கூட கருப்பு நிறமோ, அல்லது வேறு எந்த நிறமோ இல்லாமல் தூய்மையான வெள்ளை நிறத்தில் ஜொலிக்கிறது.
இந்த எருமை கன்றுக் குட்டியை பார்த்த உரிமையாளரும் குழம்பி போயிருக்கிறார். இந்த எருமை கன்று குட்டி தனது அழகிய நிறத்தால், இந்த உலகத்திற்கு வந்தவுடன் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதனால், கரவுளி அருகே இருக்கும் மச்சானி கிராமத்தில் இந்த கன்று குட்டியைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆச்சரியத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இது இயற்கையின் அதிசயம் என்றும், உலகின் 8வது அதிசயம் என்றும் கூறிச் செல்கின்றனர்.
இந்த வெள்ளை நிற எருமை கன்றுக்குட்டி கடந்த ஜூலை 17ஆம் தேதி பிறந்தது. இது குறித்து தெரிவித்த எருமையின் உரிமையாளர் நீரஜ் ராஜ்புத், ஜூலை 17ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு எருமை மாடு கன்றுக் குட்டியை ஈன்றதாகவும், அப்போது வெள்ளை நிறத்தில் பிறந்த கன்றுக் குட்டியைப் பார்த்து தாங்கள் ஆச்சரியம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கன்றுக் குட்டி பிறந்ததில் இருந்து ஆரோக்கியமாக இருப்பதாகவும், அதன் தாய் தனது குட்டியை மிகவும் அரவணைத்துப் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்.
இந்த நாட்டு இன எருமை மாடு இப்போது தான் முதன்முறையாக குட்டியை ஈன்றுள்ளதாகவும் உரிமையாளர் தெரிவித்த நிலையில், அல்பினிசம் என்ற மரபணு கோளாறு காரணமாக இவ்வாறு எருமை கன்றுக் குட்டி பிறந்துள்ளதாக கால்நடை மருத்துவர் பிரம்ம பிரகாஷ் பாண்டே விளக்கம் அளித்துள்ளார். பொதுவாக கண்கள், முடி மற்றும் தோலில் ஒரு சில இடங்களில்தான் இந்த மரபணு கோளாறு பிரதிபலிக்கும் என்றும், ஆனால் உடல் முழுவதும் முற்றிலும் நிறமற்றதாக இருப்பது மிகவும் அரிதானது என்றும் கால்நடை மருத்துவர் கூறியுள்ளார்.