ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் அரசமைப்பின் ஏற்பாட்டில் காணப்படும் குறைபாட்டைத் திருத்தும் வகையில் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அரசு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட வேண்டாம் எனத் தான் நீதி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஊடகங்களுக்குக் குறிப்பிட்டிருந்த நிலையில் ஜனாதிபதியின் பணிப்புக்கமைய சட்டமூலம் இன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசமைப்பின் 83 ஆம் உறுப்புரையானது, அதன் (ஆ) எனும் பந்தியில் ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட என்னும் சொற்பதத்துக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகள் எனும் சொற்பதத்தைச் சேர்க்கும் வகையில் இந்தத் திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையில் ஏதேனும் முரண்பாடுகள் காணப்படும் பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கியதாகக் கருதப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் வாரம் உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கும் அல்லது தேர்தல் பணிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலும் இந்தச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சியினரும், சிவில் அமைப்பினரும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 22 ஆவது திருத்த வரைவை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதுடன் மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதியின் பதவிக் காலத்துடன் தொடர்புடைய ஒரு விடயத்துக்குச் சர்வஜன வாக்கெடுப்பு கோரும்போது ஜனாதிபதித் தேர்தலுக்கான பணிகள் நெருக்கடிக்குள்ளாகும் என்று எதிர்த்தரப்பினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

22 ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் வாரம் முதலாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் 14 நாட்களுக்குள் இலங்கைப் பிரஜைகள் எவரும் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம்.

Leave A Reply

Your email address will not be published.