இந்திய அரசு தமிழக மீனவர்களை மீட்கும் என்ற நம்பிக்கை உள்ளது: உயர் நீதிமன்றம்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி விட்டது.
இந்நிலையில், மீனவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என நம்பிக்கை உள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், தமிழக மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட இயலாது என்றனர்.
இரு நாடுகளுக்கு (இந்தியா, இலங்கை) இடையேயான பிரச்சினை இது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்திய வெளியுறவு அமைச்சு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தனர்.