ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவான எம்.பிக்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு – சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கி வருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே தற்போது அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெளிவாகப் புலப்படுகின்றது.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வர்த்தக சங்கத்தினருடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எங்களுக்குச் சொல்லப்பட்டதன் பிரகாரம் தற்போது பகிரப்பட்ட நிதி ஒதுக்கீடு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்படும் என்று முதலில் சொல்லப்பட்டது.

ஆனால், ஆரம்பத்திலே அந்த நிதி சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்டு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கபட்டிருந்தனர்.

இது சம்பந்தமாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நானும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஏற்கனவே கதைத்திருந்தோம்.

எங்களுக்கு வழமையான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டைப் போலவே திட்டமுன்மொழிவுகளை வழங்குமாறு சொல்லப்பட்டது. அதன்படி யாழ். மாவட்ட அரச அதிபர் வழமை போல் எமக்குக் கடிதங்களை எழுதினார். அந்தக் கடிதங்களுக்குப் பதில் அளித்து நாம் திட்டங்களை வழங்கினோம்.

ஆனால், எங்களுடைய முன்மொழிவுகள் இழுத்தடிக்கபட்டன. இவ்வாறான நிலைமையில் தற்போது எங்களது முன்மொழிவுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அறிகின்றோம்.

ஆனால், இதற்கு முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நிதி ஒதுக்கபட்டுள்ளது. இது சம்பந்தமாக நாடாளுமன்றத்திலும் நிரல் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு கேள்வி எழுப்பப்பட்டது .

ஆகையினால் ஜனாதிபதி தனக்கு ஆதரவளிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று கருதுபவர்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

இந்த விடயம் பொதுவெளியில் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்ட பிறகு மற்றவர்களுக்கும் இந்த நிதி தற்போது பகிரப்பட்டுள்ளது என்று அறிகின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.