அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு யாருக்கு? 3 அதிகாரிகளின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன!
பொலிஸ் மா அதிபராக தேஷ்பந்து தென்னகோன் கடமையாற்றுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்ததையடுத்து, பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மூன்று மூத்த அதிகாரிகளில் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
இதன்படி, லலித் பதிநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் சஞ்சீவ தர்மரத்ன ஆகிய மூன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களில் ஒருவர் பதில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் விருப்பத்திற்கிணங்க பதில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மிகவும் பொருத்தமான அதிகாரி நியமிக்கப்படவுள்ளதுடன், பொலிஸ் திணைக்களத்தில் சிரேஷ்டத்தில் இரண்டாமிடத்தில் இருந்த நிலந்த ஜயவர்தன அண்மையில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்.
இதன்படி, மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, தற்போது பொலிஸ் திணைக்களத்தின் உயர் மட்டத்தில் உள்ளார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பாளராகவும், மூன்றாம் இடத்தில் உள்ள சஞ்சீவ தர்மரத்ன சப்ரகமுவ மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் கடமையாற்றுகின்றனர்.
எவ்வாறாயினும், வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மத்திய மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழு, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்கவை விடுதலை செய்தது.
பொலிஸ் ஆணைக்குழுவும் பொலிஸ் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் அடுத்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான பிரியந்த வீரசூரிய, சஞ்சீவ தர்மரத்ன, சஜீவ மெதவத்த, தமிந்த ஸ்ரீ ராஜித, கித்சிறி ஜயலத், ரன்மல் கொடித்துவக்கு மற்றும் அஜித் ரோஹன ஆகியோர் உள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சட்ட அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து அடுத்த இரு தினங்களுக்குள் அமைச்சர்கள் சபையின் பதிலை அறிவிப்பதற்கு நேற்று (24) கூடிய அமைச்சர்கள் சபை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் பொலிஸ் மா அதிபர் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் கருத்துப் பரிமாறப்பட்டதுடன்,அந்த முடிவில் சட்டச் சிக்கல்கள் பல இருப்பதாக அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்ததன் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ள சட்ட சிக்கல்கள் தொடர்பில் அமைச்சரவையின் பதிலை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.