தேநீர் கடை வைத்து பிழைத்திருப்பேன்: நடிகை பார்வதி.
நான் திரையுலகுக்கு மட்டும் வராமல் இருந்திருந்தால், தேநீர் கடை வைத்து தேநீர்தான் விற்பனை செய்துகொண்டிருப்பேன் என்று கூறியுள்ளார் பார்வதி திருவோத்து.
“எந்த ஒரு தொழிலிலும் வேலையிலும் கண்ணியம்தான் முக்கியம். நான் நடிகையாக கால்பதித்துள்ள இந்த திரைத் துறையிலும் கூட கண்ணியம் இல்லாத நிலை ஏற்பட்டால் இங்கிருந்து வெளியேறிவிடுவேன்,” என்று அழுத்தமாகச் சொல்கிறார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தில் பார்வதி திருவொத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தைப் பிரபலப்படுத்தும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘தங்கலான்’ படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘தங்கலான்’ வாய்ப்பு தனக்குக் கிடைத்தது குறித்துப் பேசிய பார்வதி, “சில இயக்குநர்கள் மேல் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே நான் அவர்களுடைய கதைகளில் நடித்திருக்கிறேன். அதே மாதிரிதான், இந்தக் கதைக்குள்ளும் நான் நுழைந்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகையான பார்வதி தமிழில் ‘பூ’ படத்தின் மூலம் அறிமுகானார். அதன்பின்னர் தனுஷுடன் ‘மரியான்’ ‘சென்னையில் ஒரு நாள்’, ‘உத்தம வில்லன்’, ‘பெங்களூர் நாட்கள்’, ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பார்வதி இந்தாண்டு வெளியாக உள்ள தங்கலான் படத்திலும் நடித்துள்ளார்.
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை பார்வதிக்கு ‘டேக் ஆஃப்’ எனும் மலையாளப் படத்துக்கு தேசிய விருதும் கேரள அரசின் மாநில விருதும் கிடைத்துள்ளது.
அண்மையில் யூடியூப் ஒளிவழி ஒன்றுக்கு பார்வதி அளித்துள்ள பேட்டியில், “பூ படம் நடித்தபோது எனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது. சரியாகவும் புரியாது.
“தினமும் ‘மாரி’ கதாபாத்திரத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக உணவு இடைவேளையில் ‘பூ’ படத்தின் மூலமாக இருந்த ‘வெயிலோடு போய்’ சிறுகதையை எனக்கு இயக்குநர் சசி வாசித்துக் காண்பிப்பார். தமிழ் புரியவில்லை என்றாலும்கூட அது எனக்கு தாலாட்டு போல இருக்கும்.
“எந்த ஒரு தொழிலிலும், வேலையிலும் கண்ணியம் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்,” என்கிறார் பார்வதி.
“திரைத்துறையில் பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்தும் பார்வதி பகிர்ந்துகொண்டுள்ளார்.
“பெரும்பாலான திரைத்துறைகளில் ஆண்களை மையப்படுத்தி மட்டுமே கதைகள் வருவது உண்மைதான். ஆனால், அதற்காக பெண் கதாபாத்திரங்களைத் தேவையின்றி நுழைக்கமுடியாது.
“இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தங்களுக்குப் பிடித்தமான கதைகளை பிடித்தமான நடிகர் நடிகைகளை வைத்து எடுக்கிறார்கள். அவர்களிடம் அதற்கான உரிமம் இருப்பதால் இதை மறுக்கமுடியாது.
“இயக்குநர்களிடம் எதிர்பார்ப்பதை விடவும் சொந்தமாகவே நாம் படம் எடுப்பதில் கவனம் செலுத்தலாம்.
“நான் ஒரு நடிகை. நான் இயக்குநர் ஆனாலும் யாரோ ஒரு தயாரிப்பாளரின் கீழ்தான் இருப்பேன். அதனால் அந்த முடிவை எடுக்கும் அதிகாரம் எனக்கில்லை.
வேண்டுமென்றே பெண்களை மையப்படுத்திய படங்களை இயக்குநர்கள் ஒதுக்குகிறார்களா என்று கேட்டால் ஆமாம் என்றுதான் சொல்லவேண்டும்,” என்கிறார்.
நடிகை ஊர்வசியுடன் இணைந்து ‘உள்ளொழுக்கு’ என்ற படத்தில் நடித்திருந்தார் பார்வதி. இந்தப் படம் அண்மையில் தான் திரையீடு கண்டது.