நீலகிரி முன்னாள் எம்.பி காலமானார் – பிரதமர் மோடி இரங்கல்
நீலகிரி முன்னாள் எம்.பியும் பா.ஜ.கவின் மூத்த தலைவருமான மாஸ்டர் மதன் வயது மூப்பு காரணமாக காலமானார்.
நீலகிரி மாவட்டம் குந்தா அருகே உள்ள இத்தலார் கிராமத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவரான மாஸ்டர் மதன், நீலகிரி மக்களவைத் தொகுதியில் 1998 முதல் 2003 வரை 2 முறை எம்பியாக இருந்தார். அந்த தொகுதியில் பா.ஜ.க சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.பி என்பது மாஸ்டர் மதனின் முக்கிய அடையாளமாகும்.
இவர் கடந்த சில ஆண்டுகளாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பாலாஜி நகரில் உள்ள தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், 93 வயதான மாஸ்டர் மாதன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள், பாஜக நிர்வாகிகளும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், மாஸ்டர் மதன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாஸ்டர் மதனின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
அவர் தமது சமூக சேவை முயற்சிகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்ததற்காகவும் என்றென்றும் நினைவு கூறப்படுவார். தமிழகத்தில் எங்கள் கட்சியை வலுப்படுத்தவும் அவர் அரும்பாடுபட்டார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.