12 இடங்களில் ஆளுநர்கள் மாற்றம் – ஜனாதிபதி உத்தரவு!
12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
10 மாநிலம் மற்றும் புதுச்சேரி உட்பட 2 யூனியன் பிரதேசங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்ட்ரா ஆளுநராக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அவர் ஏற்கெனவே ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும், தெலங்கானா மற்றும் புதுச்சேரியை ஆளுநராகவும் கூடுதலாக பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது மகாராஷ்ட்ராவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று தெலங்கானா ஆளுநராக, திரிபுராவின் முன்னாள் துணை முதலமைச்சர் ஜிஷ்ணு தேவ் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
அசாம் மாநில ஆளுநராக இருந்த குலாப் சந்த் கட்டாரியா, பஞ்சாப் ஆளுநராகவும், சண்டிகரின் துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அசாம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியாவிற்கு மணிப்பூர் மாநிலம் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சந்தோஷ் குமார் கங்குவார், சத்தீஸ்கர் ஆளுநராக ராமன் தேகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த விஜயசங்கரை மேகாலயா ஆளுநராகவும், ஓம் பிரகாஷ் மாதூரை சிக்கிம் ஆளுநராகவும், ராஜஸ்தான் ஆளுராக ஹரிபாபுவையும் நியமித்து குடியரசு தலைவர் திரௌபாதி முர்மூ உத்தரவிட்டுள்ளார்.