ஹெச்.டி குவாலிட்டியில் படங்கள்!- தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது!
புதிய திரைப்படங்களை முறைகேடாக வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் ஒருவரை கேரள சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
மலையாளத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் குருவாயூரப்பன் அம்பலநடையில். இந்தப்படம் திரையரங்களில் வெளியான அடுத்த நாளே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுப்ரியா மேனன், சைபர் கிரைம் போலீசாரிடம் இது குறித்து புகார் செய்திருந்தார்.
இதனையடுத்து விசாரணையை தொடங்கிய கேரள சைபர் கிரைம் போலீசார், ஜெம் ஸ்டீபன்ராஜ் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அண்மையில் வெளியான கல்கி மற்றும் மகாராஜா திரைப்படத்தின் திருட்டு பதிவுகள் அவரிடம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவரின் போனையும் போலீசார் முழுவதுமாக அலசி ஆராய்ந்து இருக்கின்றனர். அப்போது அதில் ஏராளமான திரைப்படங்களின் திருட்டு பதிவுகள் உயர் தர குவாலிட்டியில் இருந்தது தெரியவந்தது.
தியேட்டர் இருக்கையில, கப் ஹோல்டரை வைத்து, அதில் செல்போனை நிறுத்தி, யாருக்கும் தெரியாமல் படங்களை திருட்டுத்தனமாக ஸ்டீபன் பதிவு செய்திருக்கிறார். ஸ்டீபனுக்கு ஒவ்வொரு புதிய திரைப்படத்திற்கும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் 5000 ரூபாய் கொடுத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டலில் தங்கி இந்த வேலையை ஸ்டீபன் செய்து வந்திருக்கிறார். ஆனால், தமிழ் ராக்கர்ஸ் குழுவோடு மிகவும் ரகசியமாக தொடர்பு வைத்திருந்துள்ளார்.
முதல் காட்சிக்கான டிக்கெட்டை முன்னமே பதிவு செய்து கொள்ளும் ஸ்டீபன், படத்தை திருட்டுத்தனமாக பதிவு செய்து, வாட்ஸ் அப் மூலமாக அந்த கும்பலுக்கு அனுப்பி இருக்கிறார். ஸ்டீபன் வைத்திருந்த போன் 1 லட்சம் மதிப்பு இருக்கும் என்று போலீசார் கூறினர். 33 வயதாகும் ஸ்டீபனுக்கு சொந்த ஊர் மதுரை ஆகும்.