வர்த்தமானி ரத்துக்கு எதிராக போராட்டங்கள்.. பொலிஸ் படையணிகள் அழைப்பு.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கான தோட்டக் கம்பனிகளுக்கு தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் இன்று (28) ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வி.ராதாகிருஷ்ணன், எம்.உதயகுமார், எஸ்.வேலுகுமார் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்ததுடன், ஹட்டனில் உள்ள சில கடைகளிலும் முச்சக்கரவண்டிகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பி.எம்.பழனி திகாம்பரம், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதாக உறுதியளித்து அரசாங்கம் வர்த்தமானியை வெளியிட்டு ஏமாற்றியுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பெருந்தோட்ட மக்களின் பலத்தை அரசாங்கத்திற்கு எடுத்துக் காட்டுவதாகவும், சஜித் பிரேமதாச இந்த நாட்டின் ஜனாதிபதியான பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை செலவுக்கு ஏற்றவாறு அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் நாட்டில் வாழும் தோட்ட தொழிலாளர்களை சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வி.ராதாகிருஷ்ணன், நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஏற்றுக்கொள்வது குடிமக்களின் கடமையாகும்.

பொலிஸ் மா அதிபருக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவை ஏற்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நிறைவேற்று, சட்டவாக்க, நீதித்துறைக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாகும் எனவும், இவ்வாறான நிலையில் இந்த நாடு அராஜகத்திற்கு .திரும்பும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப நாட்டு மக்கள் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு செல்வார்கள், அப்போது நாட்டை ஆட்சி செய்பவர்களை நாட்டு மக்களே விரட்டியடிப்பார்கள்.

ஹட்டன் நகர மையத்தில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்து ஹட்டன் நகரை நோக்கி பேரணியாக சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டதுடன், கொழும்பில் இருந்து பொலிஸ் கலகத் தடுப்பு பிரிவின் நீர் பீரங்கி , ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன், ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலிருந்தும் பெருந்தொகையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.