அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி: அதிகாரபூர்வ அறிவிப்பு.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அது தொடர்பான ஆவணங்களில் அவர் தற்பொழுது கையெழுத்திட்டுள்ளார். அப்பொழுது பேசிய திருவாட்டி ஹாரிஸ், தமது மக்கள் சார்ந்த பிரசாரம் அதிபர் தேர்தலில் வெற்றியைத் தேடித் தரும் என்று கூறினார்.
மேலும், ஒவ்வொரு வாக்கையும் திரட்டும் பணியில் தாம் கடுமையாகப் பணியாற்றப் போவதாகவும் அவர் தமது எக்ஸ் ஊடகப் பக்கத்தில் தெரிவித்தார்.
அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக திருவாட்டி கமலா ஹாரிஸ் போட்டியிடுவார். அவரை கட்சியின் வேட்பாளராக அறிவிப்பதற்கு அதிபர் ஜோ பைடன் தமது ஒப்புதலைத் தெரிவித்தபின் திருவாட்டி ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை (ஜூலை 26ஆம் தேதி) அன்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமா திருவாட்டி கமலா ஹாரிசுக்கு தமது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், இவ்வாரத் தொடக்கத்தில் தமது வெள்ளை மாளிகை அலுவலகத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் ஜோ பைடன், திருவாட்டி கமலா ஹாரிஸ் சிறந்த துணை அதிபர் என்று கூறி, அவருக்கு நன்றி தெரிவித்தார்.
“அவர் அனுபவமிக்கவர், திடமானவர், திறமையானவர். இனி அவரைத் தேர்ந்தெடுப்பது அமெரிக்க மக்களான உங்கள் கைகளில் உள்ளது,” என்று திரு பைடன் புகழாரம் சூட்டினார்.
மற்றொரு பக்கம், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட துணை அதிபர் கமலா ஹாரிசைவிட தகுதியானவர் இல்லை என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கேரின் ஜோன் பியார் சொன்னார்.