சிவகங்கை பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை; தலைவர்கள் கண்டனம்
சிவகங்கை: வேலாங்குளத்தைச் சேர்ந்த செல்வக்குமார் (53 வயது), சிவகங்கை பாரதிய ஜனதா கட்சியின் கூட்டுறவுப் பிரிவின் மாவட்டச் செயலாளராக இருந்து வந்தவர். இவருக்கு அதே பகுதியில் ஒரு செங்கல் சூளை உள்ளது. அவர் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் இளையான்குடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது சிலர் செல்வகுமாரை வழிமறித்து வெட்டிக்கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.
மூன்று நாள்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற மூன்று படுகொலைச் சம்பவங்களால் சிவகங்கை மாவட்ட மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த சிவகங்கை காவல் துறையினர், பாஜக பிரமுகரின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைதுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பு அதிகாரி டேங்கரே பிரவீன் உமேஷ், சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப் படுத்தினார். அதையடுத்து அவர்கள் அவ்விடத்தில் இருந்து கலைந்து சென்றனர். இந்தக் கொலையில் தொடர்புள்ளவர்களைத் தேடும் பணியை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில், கடலூர் நவநீதம் நகர்ப் பகுதியை சேர்ந்தவர் பத்மநாதன் (வயது 43). இவர் அதிமுக வார்டு செயலாளராக இருந்தார். சனிக்கிழமை இரவு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருப்பனம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற கோவில் கலை நிகழ்ச்சி பார்த்து விட்டு ஞாயிற்றுக்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, காரில் வந்து வழிமறித்த கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றது.
எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் போதையால் கொலைகள் அதிகரித்து வருகின்றன. அரசியல் பிரமுகர்கள், பெண்கள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாளே இல்லை என்று சாடியுள்ளார்.
கடலூரில் அதிமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் போதைப் புழக்கத்தால்தான் கொலைகள் அதிகரித்து வருகின்றன.
தமிழக மக்களின் கோபத்தை மறைக்கவே மத்திய அரசுக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தியது. திமுக மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கில் இன்னும் துப்பு துலங்கவில்லை. தமிழகத்தில் காவல்துறையை ஏவல் துறையாக இந்த அரசு வைத்திருக்கிறது.
காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவை தடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அண்ணாமலை கண்டனம்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை தமிழக பாஜக கூட்டுறவுப் பிரிவு மாவட்டச் செயலாளர் சகோதரர் செல்வகுமார், சனிக்கிழமை இரவு, சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழ் நாடு கொலைகளின் தலைநகரம் ஆகிவிட்டது. அரசு குறித்தோ, காவல்துறை குறித்தோ, சமூக விரோதிகளுக்கு எவ்வித அச்சமும் இல்லை. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ, நாளொரு அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
காவல்துறையை ஏவல் துறையாக்கி, ஒரு குடும்பத்தின் நலனுக்காக, ஒட்டுமொத்த மாநில மக்களும் உயிரைப் பணயம் வைத்திருக்கும் அவல நிலை, வரலாற்றிலேயே நிகழ்ந்ததில்லை.
“சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றவியலாத கையாலாகாத் தனத்தைத் தொடரும் மு.க. ஸ்டாலின், தனக்கு முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்கும் தார்மீக உரிமை இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும்,” என அண்ணாமலை சாடியுள்ளார்.