தொழிலதிபர்களுக்குத் தள்ளுபடி, ஏழைகளுக்கு அபராதம்: ராகுல் சாடல்.
மோடி ஆட்சியில் சாமானிய மக்களின் காலி பாக்கெட்டுகளில் இருந்தும் பணம் வசூலிக்கப்படுவதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி தள்ளுபடி செய்த அரசு, குறைந்தபட்ச இருப்புத் தொகையைக்கூட பராமரிக்க முடியாத ஏழை இந்தியர்களிடம் இருந்து அபராதமாக ரூ.8,500 கோடி வசூலித்துள்ளது என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
பொதுத் துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 8,495 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.
2024 நிதியாண்டில் தனிநபர் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர குறைந்தபட்ச வைப்புத்தொகை (மினிமம் பேலன்ஸ்) இல்லாததால் வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ. 2,331 கோடி. இது கடந்த நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட அபராதத்தை விட 25% அதிகமாகும்.
அதிகபட்சமாக பஞ்சாப் தேசிய வங்கிப் பயனர்களிடமிருந்து மொத்தமாக ரூ.633 கோடியும், பேங்க் ஆஃப் பரோடா பயனர்களிடமிருந்து மொத்தமாக ரூ.386 கோடியும் வங்கிக் கணக்கில் மாதாந்திரமாக குறைந்த பட்ச வைப்புத்தொகை இல்லாத காரணத்தால் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர, வசதி குறைந்த மக்கள் வங்கிச் சேவைகளை பயன்படுத்தமுடியாத நிலையும் ஏற்படவே செய்கிறது. இந்தத் தொகையானது வங்கிக்கு வங்கி, இடங்களை பொறுத்து மாறுபடும்
“அபராதம் என்பது மோடியின் சக்கர வியூகத்தின் கதவு. இதன்மூலம் சாமானிய இந்தியனின் முதுகை உடைக்கும் முயற்சி நடைபெறுகிறது. ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள், இந்தியர்கள் அபிமன்யு கிடையாது, அர்ஜுனர்கள். உங்களின் சக்கர வியூகத்தை உடைத்து ஒவ்வோர் அட்டூழியத்திற்கும் பதிலடி கொடுக்க அவர்களுக்குத் தெரியும்,” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.