திரையுலகில் பொன்னான காலம் தொடங்கிவிட்டது: துஷாரா.
தனுஷ் இயக்கி, நடித்துள்ள 50வது படத்தில் அவருடைய தங்கையாக நடித்துள்ளார் நடிகை துஷாரா விஜயன்.
தனுஷுடன் நடிக்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. அந்தக் கனவு இப்போது நிறைவேறியுள்ளது. மறுபடியும் தனுஷுடன் நடிப்பதற்கான வாய்ப்பு எப்பொழுது கிடைக்கும் என்ற ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்கிறார் துஷாரா.
இந்த வாய்ப்பு கிடைத்தபோது வேறு ஒரு படப்பிடிப்புக்காக லண்டனில் இருந்தேன். தனுஷின் ‘ராயன்’ படம் பற்றியும் எனது பாத்திரம் பற்றியும் சொன்னதும் இந்த அற்புத வாய்ப்புக்காகத் தான் இவ்வளவு நாள் காத்திருந்தோமோ என என் மனம் உற்சாகத்தில் பட்டாம்பூச்சியாய்ப் பறந்தது.
“திரையுலகில் துஷாராவின் பொற்காலம் தொடங்கிவிட்டது,” என மனதுக்குள் சொல்லிக்கொண்டேன் என்கிறார் துஷாரா.
இதுவரை நான் நடித்துள்ள படங்களோடு ஒப்பிடும்போது ‘ராயன்’ ஒரு தனித்துவமான படமாக இருக்கும்.
படத்தில் ஐந்து நிமிடம் வந்தாலும்கூட நமது காட்சிகள் பார்வையாளர்கள் மனதில் பசைபோல் ஒட்டிக்கொள்ள வேண்டும். பத்தோடு, பதினொன்றாக இல்லாமல் தனித்துவம் தெரியும்படியாக நடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். அதுபோன்ற படங்களைத்தான் தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்கிறார் துஷாரா.
‘சார்பட்டா பரம்பரை’ மாரியம்மா, ‘நட்சத்திரங்கள் நகர்கின்றன’ ரெனியா, ‘அநீதி’ சுப்பு போன்ற பாத்திரங்கள் அழுத்தமாக இருந்ததுபோல் அடுத்தடுத்து நடிக்கும் பாத்திரங்களும் அதைவிட அழுத்தமாக இருக்கவேண்டும் என்று நினைப்பேன்.
திரையுலகம் எனக்குப் பிடித்தமான ஒன்று என்பதால், நாம் நடிக்கும் படத்துக்காக அதிகம் மெனக்கெடும் சூழல் வந்தாலும் அதனைச் சிரமமாகப் பார்க்கமாட்டேன்.
சண்டைக் காட்சிகளுக்காக சில பயிற்சிகளில் ஈடுபட வேண்டியிருக்கும். அதற்கெல்லாம் நான் தயங்கவில்லை. ஏனெனில், அதுதான் எங்களுடைய வேலை.
இதுபோன்ற திறன்கள்தான் என்போன்ற கலைஞர்களை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது. அந்த வகையில் பாத்திரத்துக்காக மெனக்கெடுவது, நேரம் செலவழிப்பது எல்லாமே என் வேலையின் ஒரு பகுதி என்பதால் அதை மகிழ்ச்சியாகப் பார்க்கிறேன்.
எனக்கு நடனமும் பிடிக்கும் என்பவர், ஆறாவது படிக்கும்போதே நடனம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ‘அடங்காத அசுரன்’ பாடலுக்கு பிரபுதேவா நடன அசைவுகளைச் சொல்லிக் கொடுத்து நடனமாடியது நல்ல அனுபவமாக இருந்தது.
பிரபுதேவாவிடம் இருந்து நடனம் கற்றுக்கொண்டதை முக்கியமானதாகப் பார்க்கிறேன். இந்தியாவின் மிகச் சிறந்த கலைஞர்களுடன் நானும் ஒருவராக பணியாற்றி இருப்பதை விடவும் ஒரு நடிகைக்கு வேறு எது தேவையாக இருக்கும் எனக் கேட்கிறார் துஷாரா.
நடிகர் தனுஷ்-இயக்குநர் தனுஷ் இவர்கள் இருவரையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. இயக்குநர் தனுஷ் வேகமாக இருப்பார். நேர நிர்வாகத்தில் சரியாகச் செயல்படுவார். நடிகனாகப் பார்க்கும் போது எப்படியெல்லாம் நடிக்கலாம் என்ற வியப்பை ஏற்படுத்துவார்.
தனுஷிடம் கற்றுக்கொண்டதைப் பற்றி சொல்லவேண்டும் எனில் பல விஷயங்கள் உள்ளன.
ஒரு காட்சியில் எப்படி நிற்கவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன் என்று கூறும் துஷாரா, என் கால் ஒரு இடத்தில் நிலையாக இருக்காது. ஆடிக்கொண்டே இருப்பேன். கேமரா முன்பாக நேராக (அட்டென்ஷன்) இருப்பது என்பது அடிப்படை. அதைக் கற்றுக்கொண்டேன.
கலைஞர்களுக்கு கவனம் முக்கியம். அப்போது தான் நாம் சிறப்பாக செய்ய முடியும். எல்லா நடிகர்களும் தங்கள் ஸ்டைலில் அசத்துவார்கள். அதைக் கவனித்தால் போதும். நமது திறமையை வளர்த்துக்கொள்ள முடியும் என்கிறார்.
ஒவ்வொரு படமும் எதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொடுக்கும். இதுவரை நான் நடித்த படங்களாகட்டும், நடிக்கும் படங்களாகட்டும் எல்லாமே வித்தியாசமான படங்கள். ஒவ்வொரு நாளையும் நான் கற்றல் பயணத்துக்கான வாய்ப்பாகப் பார்க்கிறேன் என்கிறார் துஷாரா.
தெலுங்கில் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. மொழி தெரியாமல் நடிப்பது பெரிய விஷயமல்ல. யாராவது குரல் கொடுத்துவிடுவார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. ‘டப்பிங்’ முக்கியம். அது பாத்திரத்தின் ஆன்மா. நடித்துக்கொண்டு ‘டப்பிங்’ பேசும்போது என்ன நடித்தோமோ அதில் பத்துமடங்கு குறைக்கவும், அதிகரிக்கவும் முடியும். அதற்கு மொழி முக்கியம். எனவே அதற்கு என்னைத் தயார்ப்படுத்திய பிறகு பிற மொழிகளில் நடிக்கப்போவேன் என்கிறார் துஷாரா.