கேரள நிலச்சரிவுகளில் சிக்கி 106 பேர் மரணம்; 98 பேரைக் காணவில்லை.
கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் கடுமையான நிலச்சரிவுகளில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிங்கப்பூர் நேரம் இரவு 9 மணி நிலவரப்படி அந்தச் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 106 ஆகவும் காணாமற்போனோரின் எண்ணிக்கை 98 ஆக இருந்தது.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை நான்கு மணி நேரத்தில் மூன்று பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் கிராமங்களும் சாலைகளும் மண்ணுக்குள் புதைந்தன.
வயநாடு மாவட்டத்தின் சூரல்மலா மற்றும் முண்டக்கை நகரப் பகுதியில் பாலங்கள் உடைந்து விழுந்துவிட்டன. உயிரிழந்த பலரது உடல்கள் சாலியார் ஆற்றில் மிதந்து சென்றதாக ஊடகச் செய்திகள் கூறின.
அங்கு ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து நிலச்சரிவுகளும் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இந்த ஆண்டும் கனமழை அதிகமாக பெய்துவரும் வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை நகர், சூரல்மலா ஆகிய பகுதிகளில் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
முண்டக்கை நகர்ப் பகுதியில் மட்டும் இரு முறை நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் பாதிப்புக்கு மக்கள் ஆளாகியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல சூரல்மலா கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் சிக்கிச் சிதையுண்டதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
நிலைமை மோசமாக உள்ளது என்று கூறிய கேரள வனத்துறை அமைச்சர் ஏ கே சுசீந்திரன், தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.
பெரும் பாதிப்பு ஏற்பட்ட முண்டக்கை பகுதியை அடைய சூரல்மலா கிராமத்தை இணைக்கும் பாலத்தின் வழியாகச் செல்ல வேண்டும். ஆனால், அந்தப் பாலம் இடிந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் பாதிக்கப்பட்ட பகுதிகள் துண்டிக்கப்பட்டன.
அவசரமாக வரவழைக்கப்பட்ட ராணுவத்தினர் தற்காலிக பாலத்தை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். தமிழகத்தின் குன்னூரில் இருந்தும் ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட விரைந்து சென்றனர்.
வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை, சூரல்மலா, அட்டமலா, நூல்புழா ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டிருப்பதாகக் கூறிய கேரள மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், இருப்பினும் வானிலை மிகவும் மோசமாக இருப்பது மீட்புப் பணிகளின் வேகத்தைக் குறைப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தொடர்புகொண்டு மீட்புப் பணிகளின் நிலவரம் குறித்து கேட்டார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000மும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்க அவர் உத்தரவிட்டார்.
வயநாடு தொகுதியின் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி, கேரள முதல்வருடன் தொடர்புகொண்டு தமது கவலையைத் தெரிவித்ததாகக் கூறினார்.
கனமழையும் பெருவெள்ளமும் கேரள மாநிலத்தில் அவ்வப்போது நிகழ்வதுண்டு. அப்போதெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவது வயநாடு, மலப்புரம் மற்றும் இடுக்கி மாவட்டங்கள்தான்.
கடந்த 2018ஆம் ஆண்டு, மழையும் வெள்ளமும் சேர்ந்து கேரள மாநிலத்தை சின்னபின்னமாக்கியதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.