வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட கிராமத்தில் இருந்த 500 வீடுகளில், இப்போது 50 வீடுகள்கூட இல்லை!

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை கிராமத்தில் இருந்த 500 வீடுகளில், இப்போது 50 வீடுகள்கூட இல்லாத நிலை உருவாகியுள்ளது.

அந்த பகுதிகளில்34 முதல் 49 வீடுகள் மட்டுமே இப்போது இருப்பதாகவும், வயநாடு வரைபடத்தில் இருந்து முண்டக்கை கிராமமே அழிந்துவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னதாக, சிறிய கிராமங்களை இணைக்கும் கடைகள் நிரம்பிய பகுதியான முண்டக்கை சந்திப்பும், சூரல்மாலா என்ற சிறிய நகரமும் மக்களின் அமைதியான நடமாட்டத்தை கொண்டிருந்தது.

அழகிய நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் போன சூரல்மாலாவும், அதனை சுற்றியுள்ள சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சிகள், வெள்ளிலிப்பாறை, சீத்தா ஏரி ஆகியவை சுற்றுலாத் தலமாகும்.

தற்போது இந்த பகுதிகள் அனைத்தும் இடிந்த கட்டடங்களும், சேறு நிரம்பிய பள்ளங்களாகவும், பெரிய பாறைகள் விழுந்ததில் விரிசல் விழுந்த சாலைகளாகவும் மாறியுள்ளன.

மலையின் உச்சியில் இருந்து அடித்து வரும் வெள்ள நீருக்கு மத்தியில் மண்ணுக்குள் புதைந்துள்ள கட்டடங்களின் இடிபாடுகளில் உறவினர்களையும், நண்பர்களையும் தேடும் காட்சிகள் காண்போரை பதற வைக்கிறது.

மக்களின் நடமாட்டத்தால் பரபரப்பாக காணப்படும் முண்டக்கை சந்திப்பு, நிலச்சரிவின் கழிவுகளாலும், உயிரிழந்தவர்களின் சடலங்களாலும் நிரம்பி காட்சி அளிக்கிறது.

கண்ணீருடன் செய்தியாளருடன் பேசிய முண்டக்கை கிராமத்தை சேர்ந்த ஒருவர், “வயநாடு வரைபடத்தில் இருந்து முண்டக்கை அழிந்துவிட்டது. மண், பாறைகளை தவிர இங்கு எங்களுக்கு எதுவும் மிஞ்சவில்லை. சேறு நிரம்பிய இந்த பகுதியில் எங்களால் சரியாக நடக்ககூட முடியவில்லை. இத்தகைய சூழலில் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் எங்களின் உறவினர்களை எப்படி தேடுவது?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதிகாரப்பூர்வமற்ற தரவுகளின்படி, முண்டக்கை கிராமத்தில் 450 முதல் 500 வீடுகள் இருந்த நிலையில், இப்போது 34 முதல் 49 வீடுகள்கூட இல்லை என்று கணக்கிடப்படுள்ளது.

வயநாடு மாவட்டம் மேம்பாடி, முண்டக்கை, சூரல்மாலா, அட்டமலை, நூல்புழா குக்கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தவர்களின் 163 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.

மேலும், 200-க்கும் அதிகமானோரின் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா வந்தவர்களின் விவரமும் சரியாக தெரியவில்லை.

இதனால், நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

Leave A Reply

Your email address will not be published.