வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் சூரல்மலையில் ஒன்றாக எரியூட்டப்பட்டது
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் சூரல்மலையில் ஒன்றாக எரியூட்டப்பட்டது காண்போரை கண்கலங்கச் செய்தது.
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ளள, சூரல்மலை, மண்டக்கையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 222 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 80 சடலங்கள் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனால், மெம்பாடி அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மரண ஓலங்கள் எதிரொலித்தன.இதனை தொடர்ந்து, சூரல்மலையில் உடல்கள் ஒன்றாக வைத்து எரியூட்டப்பட்டன. இதனை கண்ட அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
வயநாட்டில் உள்ள சூரல்மலையில் ராணுவம் மற்றும் பேரிடர் படையுடன் இணைந்து, தன்னார்வலர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், SYS சாந்த் வனம் என்ற பெயரில் செயல்படும் குழுவினர் 8 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர்.
இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சாலை விபத்தில் காயம் அடைந்தார். வயநாடு அருகே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட அமைச்சர் வீணா ஜார்ஜ் காரில் சென்றார். அப்போது, மலப்புரம் அருகே மஞ்சேரியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில், அமைச்சர் காயம் அடைந்தார். இதனை தொடர்ந்து, மஞ்சேரி அரசு மருத்துவக்கல்லூரியில் வீணா ஜார்ஜ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சூரல்மலையில் இருவழிஞ்சி ஆறு பெருக்கெடுத்து ஓடியதில், கிராமத்தையே இரண்டாக பிரித்தது. அதாவது குடியிருப்புகளை சூறையாடிக் கொண்டுச் சென்ற இருவழிஞ்சி ஆறு இரண்டாக பிரிந்து கிராமத்தை இரண்டு துண்டாக்கியது.
இந்நிலையில், கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள ரிசார்டுகளில் சிக்கித்தவித்த 19 பேரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தின் போது சூரல்மலையில் இருந்த சிலர், மேடான பகுதியில் உள்ள ரிசார்டுகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில், வனத்துறையினர் மற்றும் கிராமமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், 122 ராணுவ வீரர்கள் ரிசார்ட் இருக்கும் பகுதிக்கு சென்றனர். அங்கே சிக்கித்தவித்த 19 பேர் கயிறுகள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.