நிலச்சரிவுப் பகுதிகளை பார்வையிட்ட ராகுல், பிரியங்கா.

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் பார்வையிட்டு வருகின்றனர்.

புதுடெல்லியில் இருந்து கண்ணூர் விமான நிலையத்துக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 10.30 மணியளவில் வருகை தந்த இருவரும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு கார் மூலம் சென்றடைந்தனர்.

முதல்கட்டமாக சூரல்மலை பகுதிகளில் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டனர். மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளிடம் நிலைமையைக் கேட்டறிந்தனர்.

இவர்களுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலும் சென்றுள்ளார்.

வயநாட்டில் தொடா்மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 275க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, ராகுல், பிரியங்கா ஆகியோா் புதன்கிழமை அங்கு பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், வயநாட்டில் தொடா்ந்து நிலவும் மோசமான வானிலை காரணமாக அவா்களின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. மாநில முதல்வர் பிரனாயி விஜயனும், மீட்புப் படையினர் தவிர வேறு யாரும் வயநாடு வர வேண்டாம் என கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், இருவரும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.

தொடர்ந்து, நிலச்சரிவால் குடும்பங்களை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

கடந்த மக்களவைத் தோ்தலில் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியிலிருந்து விலகினார். அங்கு இடைத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் பிரியங்கா போட்டியிடுவாா் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.