52 ஆண்டுகளில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணி

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது இந்திய ஆடவர் ஹாக்கி அணி.

‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளும் வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 2) பொருதின. அதில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

இவ்வெற்றியில் இந்திய அணித்தலைவர் ஹர்மன்பிரீத் சிங் முக்கியப் பங்காற்றினர். 13 மற்றும் 32ஆவது நிமிடங்களில் அவர் இரு கோல்களை அடித்தார். இதன்மூலம் நடப்பு ஒலிம்பிக் போட்டிகளில் அவரது கோல் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.

ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் கோலடித்து இந்திய அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் அபிஷேக்.

ஆஸ்திரேலிய அணித் தரப்பில் டாம் கிரெய்க் 25ஆவது நிமிடத்திலும் பிளேக் கோவர்ஸ் 55ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இந்திய அணியின் கோல்காப்பாளரான பி.ஆர். ஸ்ரீஜேஷ், தமது கடைசி அனைத்துலகப் போட்டிகளில் மெச்சும் வகையில் செயல்பட்டு வருகிறார். எதிரணியின் பல கோல் வாய்ப்புகளை அவர் முறியடித்தது இந்திய அணிக்குச் சாதகமாக அமைந்தது.

ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி, ஒன்றில் சமநிலை கண்ட இந்திய அணி, பத்துப் புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் இரண்டாமிடம் பிடித்தது. அவ்வணி ஏற்கெனவே காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. பெல்ஜியம், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகியவை அப்பிரிவிலிருந்து காலிறுதிக்குள் நுழைந்த மற்ற அணிகள்.

கடைசியாக 1972ஆம் ஆண்டு ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்திருந்தது.

Leave A Reply

Your email address will not be published.