நீதிபதியை ‘பாஸ்’ என அழைத்த விஷால்: இது படப்பிடிப்பு அல்ல என கண்டிப்பு.
நடிகர் விஷால், நீதிபதியை ‘பாஸ்’ என அழைத்ததை அடுத்து, ‘பாஸ்’ என்றெல்லாம் இங்கே சொல்லக்கூடாது. கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் ஆம், இல்லை என சரியான பதிலை அளிக்கவேண்டும். மிகவும் புத்திசாலித்தனமாகப் பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா? என நீதிபதி நடிகர் விஷாலைக் கண்டித்துள்ளார்.
நடிகர் விஷால் நடிப்பதுடன் தன் படங்களைத் தானே தயாரித்தும் வருகிறார். அவரது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்காக மதுரை அன்புச் செழியனிடன் இருந்து ரூ.21.29 கோடியைக் கடனாகப் பெற்று அதை திரும்பச் செலுத்தாமல் இருந்துள்ளார்.
விஷாலின் நிலைமையைக் கண்ட லைகா நிறுவனம் விஷாலின் கடனைச் செலுத்தியது.
அதேசமயத்தில், இந்தக் கடனை திரும்ப அடைக்கும்வரை விஷால் தயாரிப்பில் வெளியாகும் படங்களின் அனைத்து உரிமைகளையும் லைகா நிறுவனத்திடம் தரவேண்டும் என ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், விஷால் தயாரித்த ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் உரிமையை லைகா நிறுவனத்திடம் கொடுக்காததால் அது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதி பி.டி.உஷா விசாரித்து வரும் நிலையில், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) நீதிமன்றத்தில் முன்னிலையான விஷாலிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.
அப்போது, லைகாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் தன்னிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் நடிகர் விஷால் கூறினார்.
இதைக்கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதி, நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும்? மிகவும் புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.
மேலும், “இது சினிமா படப்பிடிப்பு அல்ல. கவனமாக பதில் சொல்லுங்கள்,” என விஷாலுக்கு அறிவுறுத்திய நீதிபதி, ‘சண்டக்கோழி 2’ படத்தை வெளியிடும் முன்பாக பணத்தை திருப்பித் தந்து விடுவதாகக் கூறினீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு விஷால், நீதிபதியை ‘பாஸ்’ என அழைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதுபோல் ‘பாஸ்’ என்றெல்லாம் இங்கு சொல்லக்கூடாது. கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் ஆம், இல்லை என சரியான பதிலை அளிக்கவேண்டும் என கண்டித்தார்.
அதன்பிறகு லைகாவைத் தவிர வேறு யாரிடமாவது கடன் வாங்கியுள்ளீர்களா என்ற கேள்விக்கு, ஆம் என்றும், லைகாவால் தான் அந்தக் கடனை வாங்க நேரிட்டது என்றும் விஷால் பதிலளித்தார்.
அதைத்தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்து, விஷால் முன்னிலையாகும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.