மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றம் – இஸ்ரேலுக்குக் கூடுதல் ஆயுதங்கள் அனுப்பும் அமெரிக்கா
அமெரிக்கா இஸ்ரேலுக்குக் கூடுதல் ஆயுதங்களை அனுப்பவிருப்பதாகக் கூறியுள்ளது.
இஸ்ரேலுக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்க அந்த நடவடிக்கையை எடுப்பதாக அது தெரிவித்தது.
இஸ்ரேலுக்குப் போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், நிலத்தில் தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் முதலியவை அனுப்பிவைக்கப்படுமென அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு கூறியது.
ஹமாஸ் அமைப்பைத் துடைத்தொழிப்பதில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு குறியாக இருக்கிறார்.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) சில நாள்களுக்குமுன் டெஹரானில் (Tehran) கொல்லப்பட்டார்.
அவரது திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் தொடர்ந்து உறுதியுடன் செயல்படப்போவதாக ஹமாஸ் கூறியது.
டோஹாவில் இறுதிச்சடங்குகள் முடிந்து திரு ஹனியேவின் நல்லுடல் நேற்று (2 ஆகஸ்ட்) நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மரணத்திற்கு இஸ்ரேல்தான் காரணமென ஹமாஸும் ஈரானும் கூறியுள்ளன.
அந்தக் குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை.
ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்களின் மரணத்திற்கு இஸ்ரேலைப் பழிவாங்க ஈரானும் அதன் நட்புநாடுகளும் திட்டமிடுகின்றன.
அதிகரித்திருக்கும் பதற்றத்தால் இஸ்ரேல், லெபனான் ஆகியவற்றுக்கான விமானச்சேவைகளைப் பல நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.
கூடுமானவரை ஈரானிய ஆகாயவெளிக்குள் செல்வதும் தவிர்க்கப்படுகிறது.
அங்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு பல நாடுகள் அதன் குடிமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளன.