கேரள நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 350-ஐ தாண்டியது
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 350-ஐ கடந்துள்ளது. மீட்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவின் கோரப்பிடியில் சிக்கிய வயநாடு, ஐந்து நாட்கள் கடந்தும் பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை.
இடிபாடுகளில் சிக்கி, யாரேனும் உயிருடன் உள்ளார்களா என்பதை அறிவதற்கான தேடுதல் ஒரு புறமும், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணி மறுபுறமும் நடைபெற்று வருகிறது.
முண்டக்கை பகுதியில், வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்த நிலையில் அங்கே சடலங்கள் இருக்கிறதா என்பதை அறிய தெர்மல் ஸ்கேனர் மூலம் ஆய்வுசெய்யப்படுகிறது.
5ஆவது நாள் தேடுதல் பணியின்போது, ஆறுதல் அளிக்கும் விதமாக 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். முண்டக்கை பகுதியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூச்சிப்பாறா அருவியில் மூன்று பேர் சிக்கித் தவித்தது கடற்படை ரேடார் மூலம் கண்டறியப்பட்டது. பின்னர் விமானப் படை ஹெலிகாப்டர் மூலம், அவர்கள் 3 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதனிடையே வயநாட்டில் வெள்ளப்பெருக்கின்போது பல சடலங்கள் அடித்துச் செல்லப்பட்ட சாலியாற்றில் இருந்து தகரப் பெட்டி ஒன்று, எடுக்கப்பட்டது. அதில் மணி பர்ஸ், ரூபாய் நோட்டுகள், வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்டவை இருந்த நிலையில், அவை உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், வயநாட்டில் மீட்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்னும் 206 பேரை காணவில்லை என்றார். சாலியாற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மற்றும் உடல் பாகங்களை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளதாகவும், 67 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
அடையாளம் தெரியாத உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்யும் பணியை பஞ்சாயத்துகள் மேற்கொள்ளும் எனவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.
இதனிடையே, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகளை கர்நாடக அரசு கட்டித் தரும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.