‘‘ஸ்மார்ட்போன்’ பயன்பாட்டால் 80 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்’

‘ஸ்மார்ட்போன்’ எனப்படும் திறன்பேசிப் பயன்பாடு காரணமாக இந்தியாவில் 80 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் (ஐநா) உணவு, வேளாண் அமைப்பு, ‘தற்போதைய மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்கான பசியற்ற முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல்’ என்ற தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.

அவர் தமது உரையில், “கடந்த 5,6 ஆண்டுகளில் 80 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டு இந்தியா பசியற்ற முன்னேற்றம் என்ற திசையில் வேகமாகப் பயணம் செய்துகொண்டிருக்கிறது. இதுதொடர்பான நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“இந்திய கிராமப்புறங்களில் உள்ள மக்கள் திறன்பேசி மூலம் பணத்தைச் செலுத்தவும் பெறவும் ஆர்வம் காட்டுகின்றனர். திறன்பேசிப் பயன்பாட்டால்தான் இத்தனை கோடிப் பேரை வறுமையிலிருந்து மீட்க இந்தியாவால் முடிந்துள்ளது.

“இதுபோன்ற மின்னிலக்க மயமாக்க நடவடிக்கைகள் தெற்காசியாவின் ஏனைய பல நாடுகளில் மேற்கொள்ளப்படவில்லை.

“வங்கி அமைப்புடன் ஒருபோதும் தொடர்பில்லாத இந்திய கிராமப்புற விவசாயிகள் இப்போது தங்கள் அனைத்து வணிகங்களையும் தங்களது திறன்பேசிகள் வாயிலாகச் செய்து முடிக்கின்றனர். இதற்கு இணையப் பரவலாக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

“இந்தியாவில் அநேகமாக எல்லாரும் திறன்பேசி, இணைய இணைப்பைக் கொண்டுள்ளனர். அவர்கள் வறுமையிலிருந்து மீள்வதற்கு ஏதோ ஒரு வகையில் அது உதவுகிறது. இதேபோல பிற நாடுகளும் மின்னிலக்க மயமாக்கத்துக்கு அதிக முன்னுரிமை தர வேண்டும்,” என்று டென்னிஸ் பிரான்சிஸ் வலியுறுத்தினார்.

கடந்த 10 ஆண்டுகளில் மின்னிலக்க மயமாக்கல் எனும் அம்சம் பிரதமர் நரேந்திர மோடியின் அரசின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக உள்ளது. இதனால், மின்னிலக்கப் பணப்பரிவர்த்தனையில் இந்தியா உலக அளவில் முன்னிலையில் உள்ளது.

வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு எனும் ஜன் தன் திட்டம், ஆதார் அடையாள அட்டை, கைப்பேசி ஆகியவற்றை இணைப்பதன் மூலமாக இது சாத்தியமாகியுள்ளது. இதனால், பல்வேறு அரசு, சமூக நலத் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைவது உறுதி செய்யப்படுவதாகக் கூறப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.