நடிப்புடன் விழாக்களை ஒருங்கிணைக்கும் அபர்ணா.
ஒருபுறம் நடிப்பு, மறுபுறம் இணைய வர்த்தகம், நிகழ்வுகள், விழாக்களை ஒருங்கிணைப்பதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை அபர்ணா பாலமுரளி.
படத்திற்குப் படம் வித்தியாசமான நடிப்பு, அர்ப்பணிப்பை வழங்கி வரும் அபர்ணாவின் நடிப்பை ரசிப்பதற்கென்றே தமிழ், மலையாளத் திரையுலகில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இப்போது ‘ராயன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நீ இருக்குறியே’ பாடல் மூலம் மீண்டும் பிரபலமாகி உள்ள அபர்ணா, ஏற்கெனவே ‘சூரரைப் போற்று’ படத்தின் பொம்மி பாத்திரத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
தமிழக வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், நடிகை, பாடகி, நடனமணி, தொழிலதிபர் என பன்முகத் திறனோடு செயல்படுவது குறித்து மனம்திறந்து பேசியுள்ளார்.
நான் கட்டட வடிவமைப்பு குறித்து படித்துள்ளேன். அதைச் சார்ந்து ஏதாவது தொழில் தொடங்கலாம் என நினைத்துக்கொண்டு இருந்தேன்.
அப்போதுதான், மலையாள நடிகர் ஜெயராமின் மகனான ஜெயராம் காளிதாஸ், மாளவிகா காளிதாசின் நிச்சயதார்த்த நிகழ்வை முதல்முறையாக ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய பொறுப்பு எனக்குக் கிடைத்தது.
மேடை அலங்காரம், விளக்குகள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தேன் எனச் சொல்கிறார் அபர்ணா.
அதன்பின்னர், நண்பர்களுடன் இணைந்து ‘எலிசியன் ட்ரீம்ஸ்கேப்ஸ்’ என்ற நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனத்தைத் தொடங்கியதாகக் கூறிய அவர், எங்களிடம் வரும் அனைத்து ஆர்டர்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
வாடிக்கையாளர்களுடன் ஓர் அணுக்கமான உறவு ஏற்பட்ட பின்னரே நிகழ்வுகள் நடத்துவதை ஒத்துக்கொள்கிறோம்.
அதனால், ஒரு மாதத்திற்கு ஒரு நிகழ்ச்சியை நடத்தினால்கூட போதும் என முடிவெடுத்து 100% தரமாகச் செய்து கொடுத்து வருகிறோம் என்கிறார் அபர்ணா.
இணையம் வழி வர்த்தகத்தையும் தொடங்கியுள்ளோம். நயன்தாரா தான் இதனைத் தொடங்கி வைத்தார். அதுவும் நல்லவிதமாக சென்றுகொண்டுள்ளது என்று சொல்பவர், நிகழ்ச்சிகள், விழாக்களை ஒருங்கிணைப்பதற்கு தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார்.
இதற்கு தன் அம்மா சோபாவும் இசை இயக்குநரான அப்பா பாலமுரளியும்தான் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்ததாகச் சொல்கிறார்.
நடிகை, பாடகி, நடனமணி, தொழில் நிர்வாகி இவற்றில் பாடகி என்பது கொஞ்சம் சவாலான பணிதான். கொஞ்சம் பயமாக இருக்கும். சிறு வயது முதலே நடனம் கற்றுள்ளேன்.
நான் யார் என்பதை இந்த உலகத்துக்கு காண்பித்தது நடிப்புதான். சினிமா உலகம் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்துள்ளது என்கிறார் அபர்ணா.
திரையுலகைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் புதிதாகக் கற்றுக்கொள்ள ஏதோ ஒரு விஷயம் இருந்துகொண்டே இருக்கும்.
‘சூரரைப்போற்று’ படம் மூலமாக இந்தியாவில் எங்கே போனாலும் என்னை அடையாளம் கண்டுபிடித்து பேசுகிறார்கள். தேசிய விருது கிடைத்துள்ளது. என்மீது நம்பிக்கை வைத்து ‘ராயன்’ உட்பட பல படங்கள் வருகின்றன. நிச்சயம் நல்ல நடிகை என்கிற பெயர் வாங்க என்னால் முடிந்த அளவுக்கு நான் முயற்சி செய்வேன் என்கிறார் அபர்ணா.
தனுஷிடம் நேரம் தவறாமை, வேகம், பணத்தை நிர்வகிப்பது குறித்து அறிந்து கொள்ளலாம். சுதா கொங்குரா இயக்கத்திற்கும் தனுஷ் இயக்கத்திற்கும் நிறைய ஒற்றுமையைப் பார்க்க முடிந்தது. இன்னும் மிகப்பெரிய உயரங்களைத் தனுஷ் தொடுவார்.
என்ன கதையானாலும் எனது பாத்திரத்தை முழுமையாக அறிந்தபின்னரே கதைகளைத் தேர்வு செய்கிறேன்.
நல்ல கதை இருந்தாலே எந்தப் படமும் ஓடும் என்பதற்கு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, ‘பிரேமலு’ படங்கள் நல்ல உதாரணம்.
மலையாளம் மட்டுமல்ல, எல்லா மொழிகளிலும் புதிய முயற்சிகள் இடம்பெறுகின்றன. தொழில்நுட்ப ரீதியாகவும் அவற்றைப் பார்க்க முடிவதாகச் சொல்கிறார் அபர்ணா.
‘கிஷ்கிந்தகம்’, ‘மிந்தியும் பிரஜனும்’, ‘ருதிரம்’, ‘உலா’னு மலையாளத்தில் நான்கு படங்களில் நடித்துக் கொண்டு உள்ளதாகச் சொல்கிறார் அபர்ணா பாலமுரளி.