லெபனானில் இருந்து தனது குடிமக்களை வெளியேறச் சொல்லும் அமெரிக்கா.
அமெரிக்கா லெபனானில் உள்ள அதன் குடிமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
பிரிட்டன், சுவீடன், பிரான்ஸ், கனடா, ஜோர்தான் ஆகிய நாடுகளும் அதே போன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளன.
இஸ்ரேலுக்கும் லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே முழு அளவில் போர் வெடிக்கலாம் என்ற அச்சத்துக்கு இடையே அந்த எச்சரிக்கைகள் வந்துள்ளன.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniye) தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வட்டாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் இரவு முழுவதும் ஒன்றையொன்று தாக்கின.
நேற்று மேற்குக்கரையில் இஸ்ரேல் நடத்திய ஆகாயத் தாக்குதலில் உள்ளூர் ஹமாஸ் தளபதி ஒருவரும் மேலும் எட்டுப் பேரும் கொல்லப்பட்டனர்.
சில மணிநேரம் கழித்து காஸா சிட்டியில் நடத்தப்பட்ட மற்றோர் ஆகாயத் தாக்குதலில் குறைந்தது 15 பாலஸ்தீனர்கள் மாண்டனர்.
திரு ஹனியேவின் மரணத்திற்குப் பழிதீர்க்கப்படும் என்று ஈரானும் அதன் ஆதரவைப் பெற்றுள்ள குழுக்களும் கூறியுள்ளன.
ஈரான் நாளைக்குள் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஊடகம் தெரிவித்தது.