பங்ளாதேஷிலிருந்து இந்தியர்கள் வேகமாக மீட்பு: முதற்கட்டமாக 205 பேர் டெல்லி திரும்பினர்.
அமைதியின்மை நீடிக்கும் பங்ளாதேஷில் இருந்து 205 இந்திய நாட்டவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஆறு கைக்குழந்தைகளும் அடங்குவர்.
அவர்கள் அனைவரும் பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் இருந்து ஏர்-இந்தியா சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு புதன்கிழமை (ஆகஸ்ட் 7) காலை டெல்லி வந்திறங்கினர்.
அந்தச் சிறப்பு விமானம் டெல்லியில் இருந்து எந்தவொரு பயணியும் இல்லாமல் காலியாக டாக்காவுக்கு அவசரமாக அனுப்பப்பட்டது. டாக்கா விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி வருவதில் பல சவால்கள் இருந்ததாகவும் விமான நிலைய நிர்வாகத்துடன் திறம்பட ஒத்துழைத்து அவற்றைச் சமாளித்ததாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.
புதன்கிழமை முதல் ஒவ்வொரு நாளும் இரண்டு சிறப்பு விமானங்களை பங்ளாதேஷுக்கு அனுப்பி இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு உதவப்போவதாக ஏர் இந்தியா ஏற்கெனவே அறிவித்து இருந்தது.
முன்னதாக, டாக்காவுக்கான விமானப் பயணங்களை விஸ்தாரா, இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை ரத்து செய்திருந்தன. அதனால், பங்ளாதேஷில் செய்வதறியாது தவித்த இந்திய நாட்டவர்களை அழைத்து வர சிறப்பு விமானச் சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
டெல்லியில் இருந்தும் மும்பையில் இருந்தும் விரைவில் சேவைகளைத் தொடங்க இருப்பதாக அந்த இரண்டு விமான நிறுவனங்களும் அறிவித்து உள்ளன.
சென்னை, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து தினமும் ஒரு விமானச் சேவையையும் கோல்கத்தாவில் இருந்து தினமும் இரண்டு விமானச் சேவைகளையும் இண்டிகோ இயக்கி வந்தது.
இதற்கிடையே, டாக்காவில் இருந்து புறப்பட ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கும் ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களுக்கானப் பயணத்திற்குப் பதிவு செய்து இருந்தவர்கள் பயண நாளை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என ஏர் இந்தியா அறிவித்து உள்ளது.
24 பேர் கருகி மரணம்
ஷேக் ஹசினா பிரதமர் பதவியில் இருந்து விலகி நாட்டைவிட்டு தப்பிச் சென்ற பின்னரும் பங்ளாதேஷில் அரசியல் அமைதியின்மை நீடிக்கிறது.
அங்குள்ள ஜேஷோர் மாவட்டத்தில் ஆளும் கட்சித் தலைவருக்குச் சொந்தமான ஸபீர் இண்டர்நேஷனல் ஹோட்டலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் திங்கட்கிழமை இரவு தீ வைத்ததைத் தொடர்ந்து, அதில் தங்கி இருந்த 24 பேர் கருகி மாண்டனர். அவர்களில் ஓர் இந்தோனீசியரும் அடங்குவார்.
மேலும், பங்ளாதேஷ் மக்கள்தொகையில் 8 விழுக்காட்டினராக இருக்கும் இந்து சமூகத்தினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன.